சென்னை, மதுரவாயல், கார்த்திக்கேயன் நகரில் வசிக்கும் பன்னீர் செல்வம், வ/55 என்பவர், வானகரம், பழனியப்பா நகர் முதல் தெருவில் பாலாஜி கன்ஸ்டிரக்ஷன் என்ற நிறுவனம் நடத்தி வரும் நிலையில், ஏர்டெல் நிறுவனத்தின் கேபிள் பதிக்கும் பணியை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், பன்னீர் செல்வம் காலை அவரது மேற்படி நிறுவனத்திற்கு சென்ற போது, நிறுவனத்தில் வைத்திருந்த இரும்பு குழாய்கள் மற்றும் வெளியே நிறுத்தியிருந்த பொலீரோ சரக்கு வாகனம் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து, பன்னீர் செல்வம் T-4 மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
T-4 மதுரவாயல் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி திருட்டில் ஈடுபட்ட இந்நிறுவனத்தின் ஊழியர்கள் 1.சக்திவேல், வ/25, த/பெ.தினேந்திரன், வடநூம்பல் மெயின் ரோடு, திருவேற்காடு, சென்னை, 2.பாபு, வ/40, த/பெ.சேட்டு, பஜனை கோயில் தெரு, கணக்கனியன் கிராமம், வேலூர் மாவட்டம் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 17 வயது இளஞ்சிறாரை பிடித்து விசாரணை செய்தனர்.
கைது செய்யப்பட்ட மேற்படி எதிரிகளிடமிருந்து நிறுவனத்தில் திருடிய இரும்பு குழாய்கள்-4 மற்றும் போலீரோ சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் எதிரி சக்திவேல் கடந்த 6 வருடங்களாகவும், எதிரி பாபு அவ்வப்போது வந்து வேலை செய்வதும், இளஞ்சிறார் கடந்த 10 நாட்களாகவும், இந்நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், எதிரிகள் இருவரும், 17 வயது இளஞ்சிறாருடன் சேர்ந்து மேற்படி இரும்பு குழாய்களை திருடி, இந்நிறுவனத்தின் சரக்கு வாகனத்தில் ஏற்றிக் கொண்டு விற்பனை செய்ய எடுத்துச் சென்ற போது பிடிபட்டதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 2 எதிரிகளும் விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப் பட்டனர். பிடிபட்ட இளஞ்சிறார் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.