நீலாங்கரை பகுதியில் குட்கா புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த நபர் கைது. 450 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர், ‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் சென்னை பெருநகரில் தீவிரமாக கண்காணித்து, குட்கா, மாவா, ஹான்ஸ் ஆகிய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருபவர்கள், தயார் செய்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 இதன்தொடர்ச்சியாக, J-8 நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் ஈஞ்சம்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலையில் அண்ணா என்கிளேவ் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின் பேரில், அவரது இரு சக்கர வாகனத்தை சோதனை செய்த போது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

விசாரணையில் பிடிபட்ட சௌந்தராஜன் என்பவர் அவரது வீட்டினருகே அனகாபுத்தூரில் குட்கா புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து, சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

அதன்பேரில், சட்ட விரோதமாக குட்கா புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்த சௌந்தராஜன், வ/32, த/பெ.சண்முகசுந்தரம், சாமூண்டீஸ்வரி நகர், அனகாபுத்தூர், சென்னை என்பவரை கைது செய்தனர்.அவரிடமிருந்தும், அனகாபுத்தூரில் மறைத்து வைத்த இடத்திலிருந்தும் மொத்தம் 450 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், கூலிப், எம்.டி.எம். உள்ளிட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட சௌந்தராஜன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »