முத்தியால் பேட்டை பகுதியில் போலி U.K விசா தயாரித்து கொடுத்து ரூ.45 லட்சம் மோசடி செய்த நபர் கைது.

சென்னை, வடபழனி, அழகிரிநகர், 3வது தெரு, பிருந்தாவன் 2வது தளம், எண்.22/44 என்ற முகவரியில் வசித்து வரும் முகமது லியாஸ், வ/43, த/பெ. முகமது அபுபக்கர் என்பவர் வடபழனி பகுதியில் டிராவல்ஸ் ஏஜென்ஸி நடத்தி வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு முகமது லியாஸ் தனது வாடிக்கையாளர்களான 20 நபர்களுக்கு, தனது நண்பர்கள் மூலம் அறிமுகமான, திருவாரூர் மாவட்டத்தில் டிராவல்ஸ் ஏஜென்ஸி நடத்தி வரும் முகமது தாரிக் மற்றும் அவரது கூட்டாளிகளிடம், மண்ணடி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் வைத்து U.K விசா கேட்டு அட்வான்ஸ் பணம் கொடுத்துள்ளார்.

மேலும் பல தவணைகளாக வங்கி பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம் ரூ.45 லட்சம் முகமதுதரிக்கிற்கு அனுப்பியுள்ளார். பணத்தை பெற்ற முகமது தாரிக் 4 நபர்களுக்கு U.K விசாக்கள் கிடைத்துள்ளதாக கூறி மேற்படி முகமது லியாஸிடம் கொடுத்துள்ளார். விசாக்களை பெற்ற முகமதுலியாஸ், அவற்றை சரி பார்த்த போது, அது போலியானது என தெரிய வந்துள்ளது. இது குறித்து முகமது லியாஸ் N-3 முத்தியால் பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

N-3 முத்தியால் பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து போலி                 U.K விசா தயாரித்து கொடுத்து ரூ.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட கமால் நசீர், வ/45, த/பெ.நைனா முகமது, எண்.74 ஏ, மேல வடபுறம், அதிராமபட்டினம், தஞ்சாவூர் மாவட்டம் என்பவரை கைது செய்தனர். மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள முக்கிய குற்றாவளியான முகமது தாரிக் உட்பட மற்ற 3 குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட எதிரி கமால் நசீர் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப் படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »