சென்னையில் ஒருநாள் சிறப்பு தீவிர சோதனையில், பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 55 குற்றவாளிகள் கைது. 115 குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்.

நீதிமன்ற பிணை உத்தரவுகளை மீறிய குற்றவாளிகளின் பிணையை ரத்து செய்ய நீதிமன்றத்தில் 41 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, 7 குற்றவாளிகளின் பிணை ரத்து.

சென்னை பெருநகரில், குற்றங்களை குறைக்கவும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகள் பெற்றுத் தரவும், சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், உத்தரவின் பேரில், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிறப்பு சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகள் கிடைக்க காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், சென்னை பெருநகரகாவல் நிலைய குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு வழக்கு விசாரணைகளின் போது நீதிமன்றத்தில் முறையாக ஆஜராகாமல் தலை மறைவாகயிருந்து வரும் நீதிமன்ற பிடியாணை குற்றவாளிகளை (NBWs Execution) விரைந்து கண்டுபிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், நீதிமன்ற பிணை உத்தரவுகளை மீறிய குற்றவாளிகளின் பிணையை ரத்துசெய்ய நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவும் (Bail Cancellation) கடந்த ஒருநாள் தீவிர சோதனைகள் மற்றும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

அதன்பேரில், சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் அடங்கிய காவல் குழுவினர் கடந்த சென்னை பெருநகரில் தீவிர சோதனைகள் மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 55 தலைமறைவு குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 115 குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதன் மூலம் சென்னை பெருநகர காவலில் மொத்தம் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 170 குற்றவளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

மேலும், நீதிமன்றத்தில் பிணை உத்தரவு பெற்ற குற்றவாளிகள் நீதிமன்றம் அளித்த உத்தரவுகளை மீறியது தொடர்பாக, காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் 41 குற்றவாளிகளின் பிணையை ரத்த செய்ய சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இதில் 7 மனுக்களில் சம்பந்தப்பட்ட 7 குற்றவாளிகளின் பிணையை ரத்து செய்து, கனம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக உள்ள குற்றவாளிகளுக்கு எதிரான இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »