மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே பசுமலையை அடுத்த மூலக்கரையில் அமைந்துள்ளது நூற்றாண்டுகளை கடந்தஸ்ரீவிபூதி விநாயகர் திருக்கோவில். பசுமலை பகுதியில் அமைந்துள்ள கோவில்களுக்கு தலைமை கோவிலாக அமைந்துள்ள இக்கோவிலானது திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலின் கிழக்கு முக எல்லைக்கோவிலாக அமைந்துள்ளது.
நினைத்த காரியத்தை நிறைவேற்றி கொடுக்கும் ஸ்ரீ விபூதி விநாயகர் கோயில் மஹா கும்பாபிஷேகம் சமீபத்தில் நடந்து முடிந்தது. கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்களுக்கு பிறகு நடைபெறும் மண்டலாபிஷேகம் அறங்காவலர் சீனி ராஜேந்தின் தலைமையில் சிவானந்தா பட்டர், கோயில் அர்ச்சகர் அகோபிலம் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க யாகவேள்வி பூஜையுடன் நடத்தப்பட்டது.
தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட 20 கலச புனிதநீரைக் கொண்டு ஸ்ரீவிபூதி விநாயகர், ஆஞ்சநேயர், துர்க்கை, காசிவிசுவநாதர் விசலாட்சி, பாலமுருகன், நவக்கிரஹங்கள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு பால் தயிர் பன்னீர் மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் தீபராதனைகள் நடைபெற்றது. இதில் முரளி நாகராஜன், சோமசுந்தரம் ஐபிஎஸ், பாலமுருகன் கணேசன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.