மேலூர் அருகே நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டிடங்கள் இடிப்பு..

மதுரை – மேலூர் அருகே நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக 50க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டிடங்கள் இடிப்பு, வீடுகள் இடிக்கப்பட்டதால் வீதிக்கு வந்த அப்பகுதி மக்கள்,
வெட்ட வெளியில் சமையல் செய்து குடியிருக்கும் அவலநிலை. மாற்று ஏற்பாடு செய்து தருமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே  கொட்டாம்பட்டி பகுதியில் உள்ள வள்ளிகோன்குளம், கோனார்குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை சுற்றி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளதால் நீர் நிலைகளில், போதிய நீர் தேக்க முடியாமல் இப்பகுதி குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் பெரிதும் பாதிக்கப்படுவதாக  சின்ன கொட்டாம்பட்டி சேர்ந்த சமூக ஆர்வலர் கருப்பு என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

அதன்படி நீர்நிலைகள் மற்றும் நீர்வரத்து பாதைகளைச் சுற்றி ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவற்றை அகற்றும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவு படி ஆக்கிரமிப்பு அகற்றுவது காலந்தாழ்த்தி போகவே மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இதனை தொடர்ந்து வருகின்ற இருபத்தி ஏழாம் தேதிக்குள் உத்தரவை நிறைவேற்றும்படியும், அதற்கான ஆதாரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யும்படியும் கட்டாய உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்  உத்தரவின்படி, வருவாய்த்துறையினர், 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவரின் துணையோடு ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் அதிகாரிகள் இயந்திரங்கள் மூலம் அகற்றினர்.

இந்நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளில் குடியிருப்புகளில் வசித்த பொதுமக்கள் பலர் தங்களுக்கு அரசால் வழங்கப்பட்ட பட்டா உள்ளதாகவும் . பல ஆண்டுகளாக மின்சார வரி, வீட்டு வரி , தண்ணீர் வரி கட்டி, அப்பகுதியில் பத்து வருடங்களுக்கும் மேலாக குடியிருந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். 
மேலும் தங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தராமலும், உரிய கால அவகாசம் அளிக்காமலும், அவசர அவசரமாக அரசு அதிகாரிகள் தங்கள் கட்டிடங்களை இடித்துள்ளதாகவும், வீடுகள் இடிக்கப்பட்டு உள்ளதால் வீதியில் சமைத்து குடியிருந்து வருவதாகவும், புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தங்கள் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து. வீதியில் சமையல் செய்து வசித்து வரும் தங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »