திருச்செந்தூர் பகுதிகளில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த இருவர் கைது – 29 பவுன் தங்க நகைகள் மீட்பு….

கன்னியாகுமரி –

கடந்த 2 மாதங்களாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், சாத்தான்குளம், சாயர்புரம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்  இருசக்கர வாகனங்களில் வந்து செயின்பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் மேற்பார்வையில் திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளீதரன் தலைமையில் உதவி ஆய்வாளர் சுந்தரம், தலைமைக் காவலர்கள் ராஜ்குமார், இசக்கியப்பன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.*

அவரது உத்தரவின்பேரில் தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்ததில் இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் சென்னையில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு ஒருவார காலம் தங்கியிருந்து எதிரிகள் பற்றி விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் உடன்குடி கிறிஸ்டியா நகரம் பகுதியைச் சேர்ந்த அற்புதராஜ் மகன் செல்வக்குமார் என்ற சாமுவேல் (34) மற்றும்  புதுக்கோட்டை மாவட்டம், கடம்பராயன்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் மகன் ஸ்ரீராம் சந்திரபோஸ் (32) ஆகிய இருவரும் செயின் பறிப்பு வழக்குகளில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று தனிப்படையினர் திருச்செந்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து திருச்செந்தூர், சாத்தான்குளம், சாயர்புரம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற 5 செயின் பறிப்பு வழக்குகளில் பறித்து செல்லப்பட்ட 29 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செல்வக்குமார் என்ற சாமுவேல்  மீது திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை போன்ற மாவட்டங்களில் 40 க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு வழக்குகளும், மற்றொரு குற்றவாளியான ஸ்ரீராம் சந்திரபோஸ் என்பவர் மீது இருசக்கர வாகன திருட்டு வழக்கும் உள்ளது தெரியவந்தது. மேலும் இவர்கள் வேறு எங்கெங்கு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுளனர் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »