சென்னை, வேளச்சேரி, பெல்சக்திநகர் 1வது தெருவில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவர் 19.02.2018 அன்று இரவு வீட்டு ஜன்னலை திறந்து வைத்து தூங்கிய நிலையில், மறுநாள் (20.02.2018) காலை பார்த்த போது, வீட்டின் ஜன்னல் அருகே பையில் வைத்திருந்த 8.5 சவரன் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதே போல,2022ம் ஆண்டு வேளச்சேரி பகுதியில் வசித்து வரும் சீதா என்பவர் வீட்டில் வைத்திருந்த 1 சவரன் தங்கச்சங்கிலி மற்றும் பணம் ரூ.2,000/-ம் மற்றும் சிவகுமார்எ ன்பவர் வீட்டில் வைத்திருந்த ரூ.2 இலட்சம் பணமும் திருடு போயிருந்தது. மேற்படி 3 திருட்டு சம்பவங்கள் தொடர்பாக, J-7 வேளச்சேரி காவல் நிலையத்தில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், J-7 வேளச்சேரி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில், மேற்படி 3 திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரேநபர் என்பதும், பழைய குற்றவாளி என்பதும் தெரிய வந்தது.
அதன்பேரில், காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, மேற்படி 3 திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்ட அப்துல் ரஹ்மான், வ/38, த/பெ.அகமது கபிர், ரைஸ்மில் 2வது தெரு, கீழ்விசாரம், இராணிப் பேட்டை மாவட்டம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 6 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ.1 இலட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் எதிரிஅப்துல் ரஹ்மான், இரவு நேரங்களில் ஜன்னல் திறந்து வைத்திருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, ஜன்னல் வழியே வீட்டிலிருக்கும் தங்க நகைகள், பணம் மற்றும் பொருட்கள் திருடியதும், இவ்வாறு 2016-ம் ஆண்டில் மட்டும் வேளச்சேரி பகுதியில் திருட்டு குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பாக ஏற்கனவே J-7 வேளச்சேரி காவல் நிலையத்தில் மட்டும் 9 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட எதிரி அப்துல் ரகுமான், விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப் படி சிறையில் அடைக்கப்பட்டனர்.