வேலூர் – கஸ்பாவிலுள்ள சுடுகாடுப் பகுதியில் வசித்து வந்த முருகன், பச்சையம்மாள் தம்பதியர் நான்கு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். மாலை நேரம் என்பதால் ஆட்சியரை சந்திக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். எங்குச்செல்வது எனத் தெரியாமல் ஆட்சியர் அலுவலகம் அருகிலேயே சாலையோரம் நான்கு குழந்தைகளுடன் இருவரும் தங்கினர்.
ரேஷன் கார்டு, ஆதார் கார்டு போன்ற அடையாளச் சான்றிதழ்கள் இல்லாததால் சுடுகாடுப் பகுதியிலேயே இத்தனை ஆண்டுகாலமாக தார்ப்பாய் போர்த்திய சிறிய கொட்டகையில் வசித்து வந்த நிலையில் மாற்று இடத்தில் வீடு கட்டித்தரக்கோரி ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்ததாகக் கூறி முருகன், பச்சையம்மாள் தம்பதியர் கண்ணீர் வடித்தனர்.
செருப்பை தலையணைப்போல் வைத்து குழந்தைகள் தூங்கியது காண்போரின் இதயத்தை நொறுங்கச் செய்தது. நள்ளிரவு முழுவதும் குழந்தைகளுடன் கொசு கடியிலேயே மண் தரையில் படுத்திருந்த அவர்களை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அங்கிருந்து அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, இணையத்தில் வைரலாக பேசப்பட்டது.
இதையடுத்து, பணியில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ-வைப் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டிருக்கிறார் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்.
இதுகுறித்து, ஆட்சியரிடம் கேட்டபோது, ‘‘இதையெல்லாம் வி.ஏ.ஓ-க்கள்தான் பார்த்து என் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும். பணியில் கவனக்குறைவாக இருந்த காரணத்தினால் சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ-வை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டிருக்கிறேன். குழந்தைகளுடன் தவித்த தம்பதியரை தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தரும்’’ என்று மாவட்ட ஆட்சியர் திரு .குமரவேல் பாண்டியன் உறுதி அளித்தார்.