திண்டிவனம் – திண்டிவனம் அடுத்த வெங்கந்தூர் ஊராட்சியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் திறந்து வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கந்தூர் ஊராட்சியில் குடிநீர் பிரச்சினை இருந்து வந்தது. இதுகுறித்து தி.மு.க., வை சேர்ந்த மயிலம் ஒன்றிய செயலாளர் மணிமாறன் அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தானிடம் முறையிட்டார். இந்நிலையில் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் உள்ளாட்சித்துறை இணைந்து 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை கட்டி முடித்தனர். இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர். ஆர்.மாசிலாமணி, வழக்கறிஞர் ஆர்.சேதுநாதன், செந்தமிழ்ச்செல்வன், மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர் ப.சேகர், மாவட்ட சிறுபான்மையினர் அணி கே.எஸ். அன்சாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புருஷோத்தமன், திருவேங்கடம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அந்த பகுதியில் கோவிட் தடுப்பூசி முகாமை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் துவக்கி வைத்தார். மயிலம் ஒன்றிய செயலாளர் மணிமாறன் நன்றி கூறினார்.