விழுப்புரம் –
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு விசாரணைக்காக விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி., ஆகிய இருவரும் நேற்று நேரில் ஆஜராகினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாதன், இந்த வழக்கு விசாரணையை வரும் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் நடந்தது கள்ளக்குறிச்சி மாவட்டம் என்பதால், இந்த வழக்கை விசாரிக்க, விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கை வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது.அதனடிப்படையில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி ஆகியோர் மீது, விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, 400 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை, விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி மற்றும் முன்னாள் எஸ்.பி ஆகிய இருவரும் நேரில் ஆஜராகினர்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாதன் வழக்கு விசாரணையை வரும் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி தரப்பிலிருந்தும், இந்த வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டிய முகாந்திரம் இல்லை என்று முன்னாள் சிறப்பு டி.ஜி.பி தரப்பிலிருந்தும் விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டு, அந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.