விக்கிரவாண்டி தாலுகாவில் வினாயகர் சதுர்த்தி விழா குறித்து கைவினை கலைஞர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் நேற்று மாலை நடந்த கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ., அரிதாஸ் தலைமை தாங்கினார் . தாசில்தார் தமிழ்செல்வி முன்னிலை வகித்தார். மண்டல துணை தாசில்தார் செல்வமூர்த்தி வரவேற்றார் .
கூட்டத்தில் ஆர்.டி.ஓ., அரிதாஸ் பேசியதாவது:
கொரோனாநோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு தொலை நோக்கு பார்வையோடு வினாயகர் சதுர்த்தி விழா தனிநபர் இல்லங்களை தவிர அமைப்பு சார்ந்து பொது இடங்களில் வழிபட தடை விதித்துள்ளது. கடந்த ஓணம் பண்டிகையின் போது , அதற்கு முன்னர் இரட்டை இலக்கில் இருந்த நோய் தொற்று பண்டிகைக்கு பிறகு ஒரே நாளில் 32 ஆயிரத்தை தொட்டது. இதை கருத்தில் கொண்டு அரசு பொது இடங்களில் வழிபட தடை விதித்துள்ளது.
இதனால் கடந்த 2 ஆண்டுகளாக கைவினை கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளனர்.இது குறித்து தமிழக அரசிற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிக்கை அனுப்பி அவர்களுக்கு உதவி செய்ய வழி செய்யப்படும் . தற்பொழுது அரசு அறிவித்துள்ள விதிமுறை தனி நபர் வழிபாட்டிற்கு மட்டுமே அனுமதிஅளித்துள்ளது. இவ்வாறு ஆர்.டி.ஓ., அரிதாஸ் பேசினார்.
முன்னதாக கூட்டத்தில் கைவினை கலைஞர்கள் சங்க மாநில பொருளாளர் விஷ்ணுராஜ் , தமிழக அரசு சினிமா, டாஸ்மாக், திருமணம் போன்ற விழாக்களுக்கு அனுமதியளித்துள்ளது. ஆனால் ஆண்டிற்கு ஒருநாள் மட்டும் வருவாய வரக்கூடிய வினாயகர் சதுர்த்தியை தடைசெய்தது வேதனை அளிக்கிறது. கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. எங்கள் நிலைமையை பற்றி தமிழக அரசு சிந்தித்து விழா நடத்த அனுமதியளிக்க வேண்டும் என கோரினார்.
தலைமையிடத்து துணை தாசில்தார் ரேவதி, போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன், பி.டி.ஓ., எழிலரசன், பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை, வருவாய் ஆய்வாளர்கள் சார்லின், திருமதி மற்றும் தாலுகாவிலுள்ள கைவினை கலைஞர்கள் பங்கேற்றனர். விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., அரிதாஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அருகில் தாசில்தார் தமிழ்செல்வி .