மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் சாத்தையாறு அணையில் நீரின் அளவு மற்றும் நீரின் வரத்து குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் ஆய்வு செய்து பார்வையிட்டு தெரிவிக்கையில்:-
மதுரை மாவட்டத்தில் 29 அடியில் அமைந்துள்ள சாத்தையாறு அணையானது தொடர் மழையின் காரணமாக 28 அடி நிரம்பிய நிலையில் தற்பொழுது 29 அடியாக நிரம்பும் தருவாயில் உள்ளது. சாத்தையாறு அணையில் தண்ணீர் நிரம்புவதால் இப்பகுதியில் வசிக்கும் விவசாய பெருமக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும்.மதுரை மாவட்டத்தில் மழையின் அளவானது எப்பொழுதும் போல இயல்பாகவே உள்ளது. ஆனால் மதுரை மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் 70 சதவீதம் கண்மாய்கள் தண்ணீரால் நிரம்பியுள்ளன.
கண்மாய்களில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்கு வரத்துக்கால்வாய்களை ஏற்படுத்தி பொதுப்பணித்துறை வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் செயல்பட்டு வருகின்றது. சாத்தையாறு அணைக்கு தண்ணீர் வரத்திற்கு எதாவது ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவற்றை உடனடியாக கண்டறிந்து அகற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்தார்.தொடர்ந்து வாடிப்பட்டி வட்டம் நகரி கண்மாய் மற்றும் பரவை கண்மாயினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் ஆய்வு செய்து பார்வையிட்டார்.
இந்த ஆய்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பாஸ்கரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (பெரியார் வைகை) சுகுமாறன், உதவி பொறியாளர்கள் ராஜ்குமார், ஜெயமதி பாலமேடு பேரூராட்சி செயல் அலுவலர் தேவி, வாடிப்பட்டி தாசில்தார் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.