வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் வருஷநாடு ஊராட்சியில் சிங்கராஜபுரம் பாலத்திலிருந்து வருஷநாடு சுடுகாடுவரை இடையே இரண்டு பிரிவுகளாக ஆற்றுப்படுகையில் இரண்டு தடுப்புச்சுவர் மற்றும் இரண்டு படித்துறைகள் அமைத்துள்ளது. மீதம் உள்ள சுடுகாடு வரையிலான ஐயப்பன் கோவில் பின்புறம் மற்றும் பள்ளிவாசல் இலிருந்து வருஷநாடு சுடுகாடு வரை என இரண்டு பிரிவாக தடுப்புச் சுவர் கட்டிட அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். தடுப்பு சுவர் இல்லாததால் ஹோட்டல் மற்றும் கோழி கழிவுகளை வைகை ஆற்றுக்குள் கலந்து விடுகின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இப்பகுதியில் உரை அமைக்கப்பட்டு அதிலிருந்து பொதுமக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதை தடுக்கவும் மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நீர் ஊருக்குள் புகாமல் இருக்கவும் ஆற்றுப் படுகையில் உள்ள மண் அரிப்பை தடுக்கவும், தனிநபர்களின் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த இந்த தடுப்புச்சுவர் உதவும் என இப்பகுதி பொதுமக்களும் தன்னார்வலர்களும் கூறுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித் துறையினரும் இணைந்து தடுப்பு சுவர் அமைத்து கொடுக்க கோரிக்கை வைக்கின்றனர். இதே போன்ற நிலை கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது