சென்னை, வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாததால், சிறுமியின் தந்தை சிறுமியிடம் விசாரித்த போது, பிரவீன் என்ற நபர் காதலிப்பதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் உறவு கொண்டதாக தெரிவித்ததின் பேரில், சிறுமியின் தந்தை W-14 திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
W-14 திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் குற்றம் சாட்டப்பட்ட பிரவீன் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், பிரவீன் மேற்படி 16 வயது சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி அழைத்துச் சென்று பலமுறை பாலியல் உறவு கொண்டதும் தெரிய வந்தது.
அதன்பேரில், W-14 திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து எதிரி பிரவீன், வ/23, த/பெ.ராமதாஸ், பூண்டிதங்கம்மாள் தெரு, புதுவண்ணாரப்பேட்டை, சென்னை என்பவரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட எதிரி பிரவீன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.
இதேபோல, வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் வசிக்கும் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியிடம் ஒருநபர் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதாக சிறுமியின் தாயார் W-14 திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், ஜெயபால், வ/46 என்ற நபர் மேற்படி சற்று மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் வீட்டில் ஆளில்லாத சமயத்தில் வீட்டிற்குள் நுழைந்து, சிறுமியிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதன்பேரில், W-14 திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, எதிரி குணசேகர் (எ) ஜெயபால், வ/46, த/பெ.ரோஸ், சுனாமி குடியிருப்பு, புதுவண்ணாரப்பேட்டை, சென்னை என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட எதிரி குணசேகர் (எ) ஜெயபால் நேற்று (02.03.2022) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.