சென்னை, வடபழனி, சோமசுந்தர பாரதிநகர் பகுதியில் வசித்து வரும் முத்துலட்சுமி, வ/42, க/பெ.சின்னையா என்பவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டின் முன்பு காணும் பொங்கல் முன்னிட்டு, உறவினர்கள் மற்றும் பொதுமக்களுடன் பொங்கல் வைத்து விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டிருந்த போது, அதே பகுதியில் வசித்து வரும் எதிரி அப்சர் அலிகான் (எ) பர்தின் என்பவர் மேற்படி போட்டிகள் நடத்தும் இடத்திற்கு வந்து வீண்தகராறு செய்துள்ளார். அப்போது, அங்கு இருந்த பொதுமக்கள் மேற்படி அப்சர் அலிகானை கண்டித்து அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் அங்கு வந்த அப்சர் அலிகான் மற்றும் அவரது 2 நண்பர்களும் சேர்ந்து, மேற்படி நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த இடத்தில் நின்று கொண்டிருந்த செந்தில் என்பவரை கத்தியால் தாக்கியும், கல்யாண சுந்தரம் என்பவரை கட்டையால் தாக்கியும், பொதுமக்கள் மீது கற்கள் மற்றும் அங்கிருந்த சைக்கிளை தூக்கி போட்டு, தகராறு செய்து, ஆபாசமான வார்த்தைகள் பேசி, கொலை மிரட்டல் விடுத்து ,தப்பிச் சென்றனர்.
பின்னர் இரத்த காயமடைந்த செந்தில் மற்றும் கல்யாண சுந்தரம் உட்பட சில நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேற்படி சம்பவம் குறித்து முத்துலட்சுமி என்பவர் கொடுத்த புகாரின் பேரில், R-8 வடபழனி காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
R-8 வடபழனி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று, தீவிர விசாரணை செய்து, மேற்படி கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட அப்சர் அலிகான் (எ) பர்தின், வ/22, த/பெ. கமல் அலிகான், சோமசுந்தர பாரதிநகர் 4வது தெரு, வடபழனி, சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கத்தி மற்றும் கட்டை பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கைது செய்யப்பட்ட அப்சர் அலிகான் (எ) பர்தின் மீது, ஏற்கனவே R-7 கே.கே நகர் காவல் நிலையத்தில் 1 அடிதடி வழக்கு உள்ளது தெரிய வந்தது. மேலும் மேற்படி கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள இரண்டு நபர்களை பிடிக்க காவல் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட எதிரி அப்சர் அலிகான் (எ) பர்தின் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப் படி சிறையில் அடைக்கப்பட்டார்.