சென்னை, வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சுந்தரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெ/வ. 35 என்பவர் அவருடன் அலுவலகத்தில் பணிபுரியும் ஆண் நண்பருடன் கடந்த 06.12.2019 அன்று மெரினா கடற்கரை பகுதியில் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த ஒருநபர் தன்னை போலீஸ் என்று கூறி, சுந்தரியும் அவரது நண்பரும் பேசிக் கொண்டிருந்ததை புகைப்படம் எடுத்துள்ளதாகவும் கூறி மிரட்டி பணம் பெற்று சென்றுள்ளார். மேலும், சுந்தரியின் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டு அவ்வப்போது, சுந்தரியிடம் பணம் கேட்டு மிரட்டி சுந்தரி சிறுக சிறுக என இதுவரையில் ரூ.2,03,000/- வரை கொடுத்துள்ள நிலையில், அந்த நபர் மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக, D-5 மெரினா காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
D-5 மெரினா காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி புகார்தாரரிடம் போலீஸ் என கூறி மிரட்டி பணம் பறித்த சதிஷ்குமார், வ/40, த/பெ.முருகவேல், 2வது குறுக்குத் தெரு, முதல் மெயின் ரோடு, MMDA, மாத்தூர், மணலி, சென்னை என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், எதிரி சதிஷ்குமார் துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருவதும், சுந்தரியும் அவரது நண்பரும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து, தான் போலீஸ் என மிரட்டி சிறிது சிறிதாக என மொத்தம் பணம் ரூ.2,03,000/- வரை பெற்று மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்தது தெரிய வந்தது.
அதன் பேரில், மிரட்டி பணம் பறித்தல், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, எதிரி சதிஷ் குமார் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட எதிரி சதீஷ்குமார் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.