மூளை வாஸ்குலர் குறைபாட்டுக்கு அதிநவீன கதிரியக்க சிகிச்சை- மதுரை அரசு மருத்துவமனையில் சாதனை!!

மதுரை  – தமிழக அரசு மருத்துவமனை வரலாற்றிலேயே முதன்முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மூளை வாஸ்குலர் குறைபாடுகளுக்கு அதிநவீன கதிரியக்கச் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் கதிரியக்க சிகிச்சைப் பிரிவுக்கு சில மாதங்களுக்கு முன் மதுரையை சேர்ந்த 24 வயது இளைஞர் முனிய சிவா என்பவர் அனுமதிக்கப்பட்டார். தொடர் வலிப்பு நோயால் 15 வருடங்களாக பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு எம்ஆர்ஐ பரிசோதனை மூலம் மூளையில் வாஸ்குலர் குறைபாடு உறுதி செய்யப்பட்டது. பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து முனிய சிவாவுக்கு அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்கிடையில் வலிப்பு நோயின் வீரியம் தீவிரம் அடைந்ததால் அவருக்கு மூளை ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்கச் சிகிச்சை அளிக்க முடிவெடுக்கப்பட்டது.


சிகிச்சையின் முதற்கட்டமாக மதுரையின் பாலரெங்கபுரத்தில் மண்டல புற்றுநோய் மையத்தில் ஸ்டீரியோடாக்டிக் ரேடியோதெரபி சிகிச்சை மூலம் 6 நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. ‘அதிநவீன நேரியல் முடுக்கி’ என்ற கதிரியக்க கருவி மூலம் ஸ்டீரியோடாக்டிக் ரேடியோ தெரபி சிகிச்சையை மிகத்துல்லியமாக, மற்ற உறுப்புகளுக்கு எந்தவிதமான கதிரியக்க பாதிப்பும் இல்லாமல் புற்றுநோய் செல்களை மட்டும் அழிக்கும் வகையில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஸ்டீரியோடாக்டிக் ரேடியோதெரபி மூலம் வாஸ்குலார் குறைபாடு, பிட்யூடரி கட்டிகள், உறைப்புற்று, அக்குவஸ்டிக் நியூரோமா, குளோமஸ் டி உள்ளிட்ட நோய்களையும் கட்டுப்படுத்த முடியும்.தொடர்புடைய செய்தி: தென் மாவட்டங்களுக்கான முதல் எலும்பு வங்கியை பெறுகிறது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை இந்த சிகிச்சையால் முனிய சிவா தற்போது முழுமையாக குணமடைந்து நன்றாக உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளிலேயே  முதன்முதலாக மதுரை அரசு மருத்துவமனையில் இந்த சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது.


இந்த சிகிச்சையின் மூலம் மூளையில் ஏற்படும் கட்டிகள், நுரையீரல் கட்டிகள், அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடியாத கட்டிகள் மற்றும் அளவு சிறிய கட்டிகள் உடலில் எங்கிருந்தாலும் அதற்கு சிகிச்சை அளிக்க முடியும் என மருத்துவர்கள் சொல்கின்றனர். இச்சிகிச்சை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இலவசமாக கொடுக்கப்படும் எனவும், இளைஞர் முனியசிவாவுக்கு கதிரியக்க சிகிச்சையை சிறப்பாக மேற்கொண்ட மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவர் பாஸ்கர்  தலைமையிலான மருத்துவ குழுவினருக்கு மருத்துவமனை முதல்வர் ரத்னவேல் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »