விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிவகுமார், வ/26, த/பெ. ராமசாமி என்பவர் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறார். சிவகுமார் மாலை வேலை முடித்து வீட்டிற்கு செல்ல, மீனம்பாக்கம் சுரங்கப் பாதை அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த 2 நபர்கள் சிவகுமாரை வழி மறித்து பணம் கேட்டு மிரட்டி, அவர் வைத்திருந்த 1 செல்போன் மற்றும் பணம் ரூ.1,700/- பறித்துக் கொண்டு ஓடினர். உடனே சிவகுமார் சத்தம் போடவே, அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் சற்று தொலைபில் கண்காணிப்பு பணியிலிருந்த S-3 மீனம்பாக்கம் காவல் நிலைய காவலர்கள் ஓடிய எதிரிகள் இருவரையும் மடக்கிப் பிடித்து, S-3 மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
S-3 மீனம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில், பிடிபட்ட நபர்கள் 1.தினேஷ்குமார், வ/22, த/பெ.சுப்ரமணி, குப்பாபாய் 1வது தெரு, யானைகவுனி, சென்னை, 2.தனா(எ) தனசேகர், வ/42, த/பெ.ராமன், கல்யாணபுரம் 1வது தெரு, வால்டாக்ஸ் சாலை, யானைகவுனி, சென்னை என்பதும், இருவரும் சேர்ந்து சிவகுமாரின் செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு ஓடிய போது பிடிபட்டதும் தெரிய வந்தது.
அதன் பேரில், மேற்படி சம்பவம் குறித்து S-3 மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, எதிரிகள் தினேஷ்குமார் மற்றும் தனசேகர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து புகார்தாரரின் 1 செல்போன் மற்றும் பணம் ரூ.1,700/- பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில் எதிரி தினேஷ்குமார் மீது 1 திருட்டு வழக்கும், S-3 மீனம்பாக்கம் காவல்நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான தனசேகர் மீது 6 குற்றவழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.