வேப்பூர்- அருகிலுள்ள மாளிகைமேடு கிராமத்தில் வேப்பூர் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம், வேப்பூர் பகுதியில் அவ்வப்போது வீடு புகுந்து மர்ம நபர்கள் வீட்டில் உள்ளவர்களை தாக்கி நகை மற்றும் பணத்தை பறித்து செல்கின்றனர்.
இவ்வாறு திருடி செல்லும் மர்ம நபர்களை பிடிப்பது காவல்துறைக்கு சவலான வேலையாக உள்ளது. அதற்காக பொது மக்கள் தங்கள் கிராமத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக காவல்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், நல்லூர் ஒன்றியம், வேப்பூர் அருகிலுள்ள மாளிகைமேடு கிராமத்தில் நடைபெற்ற ஆலோசனை மற்றும் கலந்தாய்வு கூட்டத்திற்கு வேப்பூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு தலைமை தாங்கி விளக்கவுரை ஆற்றினார். ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். வேப்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ஆர்,கே,ரவிச்சந்திரன், சந்திரா ஆகியோர் பகலும் இரவும் பாதுகாப்பாக எப்படி இருப்பது என்பது குறித்து விளக்கமளித்தனர்.
பின்னர் இன்ஸ்பெக்டர் பேசும் போது மாளிகைமேடு கிராமத்தில் அனைத்து தெருக்களிலும் சிசிடிவி கேமரா பொறுத்த கிராம மக்கள் ஒன்று சேர்ந்து முயற்சி எடுக்க வேண்டும், அப்போதுதான் உங்கள் கிராமத்திற்கு திருடவோ, வழிப்பறி செய்யவோ வருபவர்கள் எந்த வாகனத்தில் வந்தார்கள், எந்த வழியாக திரும்ப சென்றார்கள் என தெரியவரும், அதனால் நாம் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, திருடர்களை விரைந்து பிடிக்க முயற்சி எடுத்து பறி போன பொருளையோ, பணத்தையோ மீட்கலாம் ஆகவே, அவசியம் அனைத்து தெருக்களிலும் சிசிடிவி, கேமரா பொறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தார். இக்கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் அருண்,காவல் நிலைய எழுத்தர் சதீஸ் மற்றும் காவலர்கள் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.