சென்னை, திருமுல்லைவாயலைச் சேர்ந்த சுனில், வ/48 என்பவர், மாநகர பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். சுனில் மாநகர பேருந்து தடம் எண்.26 என்ற பேருந்தில் நடத்துனராக வேலை செய்து கொண்டிருந்த போது, மதியம் சுமார் சுமார் 03.00 மணியளவில், வள்ளுவர் கோட்டத்திலிருந்து கோடம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது பேருந்து கோடம்பாக்கம், பெரியார் நகர் பேருந்து நிறுத்தம் அருகே செல்லும் போது, ஒரு நபர் திடீரென சாலையை கடக்க பேருந்தின் முன் சென்றதால், ஓட்டுநர் திடீரென பேருந்தை நிறுத்தினார். உடனே, அந்த நபர் ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் பேசி கீழே இருந்த கல்லை எடுத்து பேருந்தின் முன்பக்க கண்ணாடி மீது வீசியதில், பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. உடனே, பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பொதுமக்கள் அந்த நபரை மடக்கிப் பிடித்து, காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்து, R-4 சௌந்தர பாண்டியனார் அங்காடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
R-4 சௌந்தர பாண்டியனார் அங்காடி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில், பிடிபட்ட நபர் நிதிஷ்குமார், வ/19, த/பெ.அன்பு, சிவாவிஷ்ணு கோயில் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை என்பதும், பேருந்தை திடீரென நிறுத்தியதால், ஆத்திரத்தில் சாலையில் இருந்த கல்லை எடுத்து பேருந்தின் வீசி பேருந்தின் கண்ணாடியை உடைத்ததும் தெரிய வந்தது. அதன் பேரில், மேற்படி சம்பவம் குறித்து R-4 சௌந்தர பாண்டியனார் அங்காடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, எதிரி நிதிஷ் குமாரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட எதிரி நிதிஷ் குமார் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.