மதுரை – மதுரை மாவட்டம், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான கல்விக் கடன் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தலைமையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் முன்னிலையில் இன்று (06.09.2021) நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி பயில செல்லும் மாணவ, மாணவியர்களுக்கு வழிகாட்டுவதற்கும், கல்விக் கடன் பெறுவது தொடர்பான வழிகாட்டுதலை வழங்குவதற்காகவும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தில், கல்விக் கடன் கோரும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் தங்குதடையின்றி கல்விக் கடன் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம்.
நடப்பாண்டில், மதுரை மாவட்டத்தில் ரூபாய் 500 கோடி மதிப்பீட்டில் கல்விக் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து இத்திட்டத்தை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்விக் கடன் பெறுவது தொடர்பான மாணவ, மாணவியர் உதவி மையம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அலுவலகத்தில் இந்த வாரம் முதல் செயல்பட உள்ளது.
கடந்த ஜூன் மாதம் வரை 657 மாணவ, மாணவியர்கள் கல்விக் கடன் வேண்டி விண்ணப்பித்துள்ளனர். இதுவரை, ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள 357 மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும்.
தலா ஒரு ஆசிரியர் வீதம் 357 ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்களுக்கு கல்விக் கடன் பெறுவது தொடர்பான எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு அதிகளவில் கல்விக் கடன்கள் வழங்கும் வகையில் அனைத்து கல்லூரிகள் மற்றும் வங்கிகளில் கல்விக் கடன் பெறுவதற்கான வழிகாட்டும் விளம்பரப் பலகையினை வைத்திட அறிவுறுத்தியுள்ளோம். ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். காரணமின்றி, கல்விக் கடன் விண்ணப்பங்களை நிராகரித்தால் வங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடேசன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை (திட்ட அலுவலர்) அபிதா ஹனீப், முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் முன்னோடி வங்கி மேலாளர் திரு.அனில் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.