மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாரம் அட்மா திட்டத்தின் கீழ் ரங்கசாமி பட்டி கிராமத்தில் பருத்தி பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப் பள்ளி பயிற்சி நடத்தப்பட்டது. 6 வகுப்புகள் நடத்தப்பட உள்ள பண்ணை பள்ளியின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வகுப்புகள் நடத்தப்பட்டது. இப்பயிற்சிக்கு ராமசாமி வேளாண்மை உதவி இயக்குனர் தலைமையில் விவசாயிகளுக்கு பயிரிட உகந்த பருவம் மற்றும் இரகங்கள் உரம், மண்புழு உரம் போன்றவற்றை அடி உரமாக இடுதல், தொழு உரம், மண்புழு உரம்,கந்தக அமிலத்தை மண் பரிசோதனை முடிவுகளின்படி ரசாயன உரம் இடுதல் போன்ற தொழில்நுட்ப கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
ஊட்டச்சத்துக் குறைபாடுகளை கண்டறிந்து பயிருக்கு தேவையான நுண்ணூட்ட உரங்கள் தேவையான அளவில் அமைத்தல், உரிய நேரத்தில் பயிர் கலைத்தல் மற்றும் பயிர் இடைவெளியை நிரப்புதல், நீர் மேலாண்மை முறைகள் ,களைக்கொல்லியை முறையாக பயன்படுத்தி களை நிர்வாகம் செய்தல், உர மேலாண்மை முறைகள் வளர்ச்சி ஊக்கிகளை பயன்படுத்துதல் பயிரை தாக்கும் முக்கிய பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகளை போன்ற தொழில்நுட்ப கருத்துகள் பற்றியும் வழங்கப்பட்டது.
மேலும் இப்பண்ணை பள்ளியில் விவசாயிகளை பருத்தி வயலில் உள்ளே சென்று தங்களுக்குத் தெரிந்த பூச்சி மற்றும் நோய் தாக்கப்பட்ட செடியினை எடுக்கச் சொல்லி நன்மை மற்றும் தீமை செய்யக்கூடிய பூச்சி இனங்கள் அடையாளம் காணப்பட்டு பாதிக்கப்பட்ட நோய்க்கான கட்டுப்பாட்டு முறைகள் வழங்கப்பட்டது.
மேலும் அடுத்தடுத்த வகுப்புகளில் விவசாயிகளுக்கு பருத்தி பயிரின் வயது ஏற்ப அடுத்தடுத்து செய்ய வேண்டிய தொழில் நுட்பங்களை இப்பள்ளியின் வாயிலாக அனைத்து தொழில்நுட்பங்களையும் விவசாயிகளுக்கு கொண்டு செல்வதே இதன் நோக்கம் என்று ராமசாமி வேளாண்மை உதவி இயக்குனர் கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் சங்கரபாண்டியன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் இந்திராதேவி மற்றும் சுரேஷ்குமார், மாரிமுத்து ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.