மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி திருவிழாவில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் குலுக்கல் முறையில் தேர்வான நபர்களுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி இன்று சிறப்பு பரிசுகளை வழங்கி தெரிவிக்கையில்….
தமிழ்நாடு முதலமைச்சர் சீரிய முயற்சியின் விளைவாக தமிழக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக மாவட்ட நிர்வாகம் சிறப்பான முறையிலே செயல்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இதுவரை கொரோனா தடுப்பூசி முதல் தவணையை 62 சதவீத நபர்கள் செலுத்திக் கொண்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி இரண்டாம் தவணையை செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றனர். நாளைய தினம் (23.10.2021) தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. மதுரை மாவட்டத்தில், 1.2 இலட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை வழங்க இருக்கின்றனர்.
எனவே, மதுரை மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து மக்களும் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழக அரசு அறிவிக்கும் எந்த திட்டமாக இருந்தாலும் அவற்றை உடனடியாக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மருத்துவர்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து நிறைவேற்றி வருகின்றனர். தமிழகத்திலேயே முன்மாதிரி மாவட்டமாக மதுரை மாவட்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மருத்துவ முகாமிலே கொரோனா தடுப்பூசி முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணையை செலுத்திக் கொள்வதற்காக கலந்து கொண்ட நபர்களை எல்லாம் குலுக்கல் முறையிலே தேர்வு செய்து அவர்களை ஊக்குவிக்கின்ற வகையில் அன்றாட பயன்பாட்டிற்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. பரிசுப் பொருட்கள் வழங்குவது மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என்ற வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி சிறப்பு பரிசுகள் வழங்கியுள்ளது.
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்கான விழிப்புணர்வினை தமிழக அரசோடு சேர்ந்து பத்திரிகைதுறையும், தொலைக்காட்சியும் செயலாற்றி வருகின்றனர். மேலும், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் நாடக கலைஞர்கள் மூலமாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் ஒலிப்பெருக்கி மூலமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்க தகவல் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. கிராமப் பகுதிகளிகளில் ஒன்றியங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம்.
கொரோனா மூன்றாவது அலை பரவல் வருவதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முழுமையாக செய்து முடிக்கப்பட்டால் கொரோனா மூன்றாவது அலை பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும். கொரோனா மூன்றாவது அலை பரவலை கட்டுப்டுத்துவதற்காகத்தான் நேற்றைய முன்தினம் கூட மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பிளாண்ட் துவக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டிருக்கும் மருத்துமனையை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவோடு மற்ற நோய்கள் வந்தாலும் அவற்றை உடனடியாக குணப்படுத்துவதற்காக மருத்துவத்துறையை தயார்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.
கொரோனா தடுப்பூசி முதல் தவணையை 62 சதவீத நபர்கள் செலுத்திக் கொண்டுள்ளனர். நாளைய தினம் மாநகரப் பகுதியிலிருந்தும், கிராமப் பகுதியிலிருந்தும் மருத்துவ முகாமில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு 1.2 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பத்திரப்பதிவுத் துறையை, வருவாய்த்துறையை போன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிகமாக பதிவு செய்யக்கூடிய அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய பணியாளர்களை A, B, C என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். A பிரிவில் பணியாற்றுகின்றவர்களின் காலகட்டம் ஓராண்டாகவும், B பிரிவில் பணியாற்றுகின்றவர்களின் காலகட்டம் ஈராண்டாகவும் மற்றும் C பிரிவில் பணியாற்றுகின்றவர்களின் காலகட்டம் மூன்றாண்டாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வணிகவரித்துறையில், ஏற்கனவே பணியாற்றிக்கொண்டிருப்பவர்களில் 1000 நபர்களுக்கு பதவி உயர்வு வழங்கி தவறான முறையில் வணிகம் செய்கின்றவர்களை ஆய்வு செய்து கண்டுபிடிப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தவறான முறையில் வணிகம் செய்கின்றவர்களுக்கு உறுதுணையாக இருக்கக்கூடியவர்கள் உயர் பதவியில் இருந்தாலும் கூட அவர்கள் மீது உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் , மாநகராட்சி ஆணையாளர் மரு.கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.செந்தில்குமாரி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனீப் மற்றும் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செல்லத்துறை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.