மதுரை மாவட்டத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் அறிவுரையின் பேரில் அனைத்து வட்டாரங்களில் செயல்பட்டு வரும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வேளாண்மை இணை இயக்குநர், வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது உரவிற்பனை நிலையங்களில் இருப்பு மற்றும் விலை விபரப்பட்டியல், கொள்முதல் பட்டியல்கள், இருப்புப் புத்தகம், உர இருப்பு மற்றும் விற்பனை இரசீது ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் போது அசல் மற்றும் புத்தக இருப்பு சரிபார்க்கப்பட்டது. ஆய்வில் ஒவ்வொரு உர விற்பனை நிலையத்திலும் உர இருப்பு மற்றும் விலை விபரங்களை விவசாயிகளின் பார்வைக்கு படும்படி, எழுதி வைக்க வேண்டும், ஒரே நபரின் பெயரில் அதிகப்படியான விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சில்லரை விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும், மொத்த உர விற்பனையாளர்கள் வெளிமாவட்டங்களுக்கு உரங்களை மாற்றம் செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது மற்றும் விவசாயம் செய்யாத நபர்களுக்கு உரங்களை விற்பனை செய்யக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உரம் வாங்கச் செல்லும்போது, ஆதார் அட்டையுடன் செல்லவேண்டும்.
அனுமதி பெறாத உரங்களை விற்றாலோ, உரிய உரிமம் இன்றி உரங்களை விற்றாலோ, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லரை விலைக்கு மேல் உரங்களை விற்பனை செய்தாலோ அவர்கள் மீது உரக்கட்டுபாட்டு சட்டப்படி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்றாலோ, உரிய உரிமம் இன்றி விற்றாலோ, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லரை விலைக்கு மேல் பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்தாலோ அவர்கள் மீது பூச்சிக்கொல்லி மருந்து சட்டப்படி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விலை மற்றும் தரம் குறித்து புகார் ஏதும் இருப்பின் வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) – 97516 23274 மற்றும் வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுப்பாடு) – 86107 11504 ஆகியோர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என வேளாண்மை இணை இயக்குநர் த.விவேகானந்தன் தெரிவித்தார்.