மதுரையில் நரிமேடு கேந்திர வித்யாலயா பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் 12 வயது மாணவி திவ்ய ஸ்ரீ சிலம்பம் விளையாட்டில் உலக சாதனை படைத்துள்ளார். தமிழக அரசு 3 சதவிகித இட ஒதுக்கீட்டில் சிலம்பம் போட்டியை சேர்த்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தொடர்ந்து 19 மணி நேரம் இருபுறமும் கத்தியால் செய்த சிலம்பம் சுற்றி சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.
இந்நிகழ்ச்சி ஐயர் பங்களா அருகே உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தாளாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. சோழன் உலக சாதனை புத்தக நிறுவனர் முனைவர் நிமலன் நீலமேகம், தென்மண்டல தலைவர் முனைவர்.சுந்தர், மாவட்ட பொதுச் செயலாளர் டாக்டர் கஜேந்திரன், சி.பி.ஐ.அதிகாரிகளான பாண்டியன், முருகானந்தம், ஆளவந்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவியின் பெற்றோர் எஸ்.சரவணன் எஸ்.பிரேமா சரவணன் ஆகியோர் தெரிவிக்கையில் குழந்தை திவ்ய ஸ்ரீ 10 வயது முதல் சிலம்பத்தில் ஆர்வம் காட்டி கற்றுக் கொள்ளத் தொடங்கினார். தற்போது இரண்டு ஆண்டுகள் பயிற்சியாளர் சண்முகவேல் சிறப்பாக பயிற்சி அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து மாணவியின் தன்னம்பிக்கையும் ஊக்கமும் சிலம்ப விளையாட்டில் சாதனை படைக்க வெற்றிகரமாக அமைந்தது.