சென்னை, புதுவண்ணாரப் பேட்டை, சிவன்நகர் 3வது தெருவில் வசித்து வரும் கோபிநாதன், வ/40, த/பெ. ராஜகோபால் என்பவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார். இவருடன் வேலை செய்து வரும் தியாகராஜன் மற்றும் அவரது அண்ணன் தங்கராஜ் ஆகியோர் டைல்ஸ் ஒட்டுவதற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக கடந்த 08.01.2023 அன்று முன்பணமாக ரூ.2,000/- ஐ மேற்படி கோபிநாதனிடம் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் கோபிநாதன் மேற்படி பணத்தை செலவு செய்து விட்டு வேலைக்கு வரமால் இருந்துள்ளார். இது குறித்து தியாகராஜன் மற்றும் தங்கராஜ் ஆகியோர் கடந்த 13.01.2023 அன்று கோபிநாதனின் வீட்டிற்கு சென்று கேட்டபோது, இருதரப்பினருக்கும் வாய்தகராறு ஏற்பட்டு, வாய்தகராறு முற்றிய நிலையில் தியாகராஜன் மற்றும் தங்கராஜ் இருவரும் சேர்ந்து, கோபிநாதனை உருட்டுக்கட்டையால் தாக்கி விட்டு, கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர்.
இச்சம்பவத்தில் இரத்த காயமடைந்த கோபிநாதன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேற்படி சம்பவம் குறித்து H-5 புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
H-5 புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 1.தியாகராஜன், வ/39, த/பெ.மணி, சிவன்நகர் 3வது தெரு, புதுவண்ணாரப்பேட்டை, சென்னை மற்றும் அவரது அண்ணன் 2.தங்கராஜ், வ/43, த/பெ.மணி, சிவன்நகர் 3வது தெரு, புதுவண்ணாரப்பேட்டை, சென்னை ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து குற்றசம்பவத்திற்கு பயன்படுத்திய உருட்டுக்கட்டை பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட2 நபர்களும், விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி, சிறையில் அடைக்கப்பட்டனர்.