விக்கிரவாண்டியில் விபத்தை தடுக்க மேம்பால வசதியும், விவசாயிகள் நலன் கருதி நந்தன் கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரிடம் எம்.எல்.ஏ., புகழேந்தி கோரிக்கை வைத்தார் .
விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி , சட்டமன்றத்தில் கோரிக்கை மான்யத்தின் போது தொகுதி வளர்ச்சி பணி குறித்து பேசியதாவது :
விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்து ,எளியவனான எனக்கு பிரச்சாரம் செய்து வெற்றிபெற செய்தமைக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் . தொகுதி வாக்காளபெரு மக்களுக்கும் , கட்சி நிர்வாகிகளுக்கும் ,அமைச்சர் பொன்முடி,எம்.பி., டாக்டர் கவுதமசிகாமணி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
நான் சார்ந்த விக்கிரவாண்டி தொகுதி வரலாற்றில் முக்கியவத்துவம் வாய்ந்த தொகுதி . விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டிருக்கும் விவசாய பெருமக்களுக்கு ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் விவசாயிகளுடன் ஒருநாள் என்ற திட்டத்தை அறிவித்ததிற்கும் , விழுப்புரம் மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக வானுார் தொகுதியில் டைடல் பார்க், திண்டிவனம் சிப்காட் தொழிற்பேட்டையை துவக்க அறிவித்ததிற்கும், தமிழக முதல்வருக்கு மாவட்ட மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .
விக்கிரவாண்டி தொகுதியில் கிராமங்களை உள்ளடக்கிய தொகுதி. கடந்த 2010 ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியால் முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனை அமைக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக எவ்விதமான வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெறவில்லை. விக்கிரவாண்டி தொகுதியிலுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் வளர்ச்சி பெற நந்தன் கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றவும் , பம்பை ஆற்று வாய்க்காலை துார் வாரவேண்டியும் , தென்பெண்ணையாற்றில் கடலுார்–விழுப்புரம் மாவட்ட எல்லையான தளவனுாரில் கடந்த ஆட்சியில் ரூபாய் 25 கோடி செலவில் கட்டப்பட்ட தரமற்ற தடுப்பணை இடிந்து விழுந்தது. அதை சரி செய்து தருமாறும் ,
விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் முனையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படுவதை தவிர்க்க மேம்பாலம் வசதியும், விக்கிரவாண்டி–கும்பகோணம் நான்கு வழிச்சாலை பணியினை விரைந்து முடித்திடவும் , விக்கிரவாண்டியிலிருந்து தென்பேர் வழியாக சென்று இணையும் செஞ்சி சாலையை அகலப்படுத்திடவும் , ஏழை எளிய மாணவ, மாணவிகள் நலன்கருதி காணை அல்லது அன்னியூர் பகுதியில்அரசு கலை அறிவியல் கல்லுாரி துவங்கிடவும் , முதியோர் ஓய்வூதிய தொகை கேட்டு அதிமானோர் விண்ணப்பித்துள்ள மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை வேண்டியும், தொகுதியிலுள்ள இருளர் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு மனைப்பட்டா வழங்கவும், தொகுதியில் தேவைக்கேற்ப அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் . இவ்வாறு தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி கோரிக்கை மான்யத்தின் போது பேசினார் .