தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள எஸ் கைலாசபுரம் கிராமத்தில் தனியார் சிமெண்ட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு கைலாசபுரம் சவரிமங்கலம் கொம்பாடி தலவாய்புரம் உள்ளிட்ட கிராம மக்கள் தொடர் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தனியார் சிமெண்ட் தொழிற்சாலை அமைந்தால் தங்கள் கிராம மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கைலாசபுரம் பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கைலாசபுரம், சவரிமங்கலம், கொம்பாடி, தளவாய்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தனியார் சிமெண்ட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகமனதாக தீர்மானம் கொண்டுவந்தனர். இதையடுத்து பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து அதிகாரிகள் கிராமசபை கூட்டத்தில் பொதுமக்களின் கருத்தை பதிவேட்டில் பதிவு செய்தனர் கிராம சபை கூட்டத்தில் தனியார் சிமெண்டு தொழிற்சாலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அரசு தனியார் சிமெண்ட் தொழிற்சாலை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் இல்லையென்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.