தூத்துக்குடி – தூத்துக்குடி தாளமுத்துநகர், தாய் நகரைச் சேர்ந்தவர் காளிதாஸ் மனைவி உமையர்கனி 32, இந்த தம்பதிகளின் மகள் எஸ்தர் (11). அன்று மாலை உமையர்கனி மகள் எஸ்தருடன் தெர்மல் நகர் கேம்ப் 1ல் உள்ள தனது தாயார் வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி – திருச்செந்தூர் ரோட்டில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். தூத்துக்குடி துறைமுகம் – மதுரை பைபாஸ் ரோட்டில் ரவுண்டானா அருகே செல்லும்போது துறைமுகத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற சரக்கு லாரி அவர்களது ஸ்கூட்டரில் மோதியது. இதில், தாயும் – மகளும் லாரியின் பின்பக்க டயரில் சிக்கினர்.
இவ்விபத்தில் சிறுமி எஸ்தர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த உமையர் கனி, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தெர்மல் நகர் இன்ஸ்பெக்டர் ராதிகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமி எஸ்தரின் சடலத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிந்து, லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விபத்தால் துறைமுகம் – மதுரை பைபாஸ் ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்தை தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார், டவுன் டிஎஸ்பி கணேஷ் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
டிரைவரின் போதையால் விபத்து..?
லாரி டிரைவர்கள் கஞ்சா, மது போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தி வருவதால் நிதானமின்றி அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவதால் விபத்துக்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க தூத்துக்குடி துறைமுகம் முதல் டோல் கேட் வரை காவல் துறையினர் அடிக்கடி சோதனை செய்தால் இது போன்ற விபத்துகள் தவிர்க்கலாம்.
மேலும், கனரக வாகனங்களில் பெரும்பாலும் கிளீனர்கள் இல்லாமலே லாரிகள், டாரஸ் லாரிகள் போன்றவை இயங்கி வருகின்றன. இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை. இதன் காரணமாகத்தான் இது போன்ற உயிர்ச்சேதங்கள் ஏற்படுகின்றன என்பது சமூக ஆர்வலரின் குற்றச்சாட்டாக உள்ளது.