சென்னை, தி.நகர் பகுதியைச் சேர்ந்த ஶ்ரீராமுலு, வ/43 என்பவர் தி.நகர், தணிகாச்சலம் சாலையிலுள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த போது, அவரது செல்போனை மேஜையில் வைத்திருந்த போது, சிறிது நேரத்தில் அவரது செல்போன் திருடு போயிருந்தது தெரிய வந்ததது. இதே போல, ஆகாஷ் என்பவர் தி.நகர், தாமோதரன் தெருவில் உள்ள டீக்கடையில் அமர்ந்திருந்த போது, அவர் மேஜையில் வைத்திருந்த அவரது செல்போனும் திருடு போயிருந்தது.மேலும், ரமேஷ் என்பவர் தி.நகர், எம்.ஆர்.சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள், ரமேஷிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
மேற்படி 2 திருட்டு மற்றும் 1 வழிப்பறி சம்பவங்கள் தொடர்பாக, ஶ்ரீராமுலு, ஆகாஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில், R-1 மாம்பலம் காவல் நிலையத்தில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
R-1 மாம்பலம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடங்களினருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், இரு சக்கர வாகனத்தில் வந்து வழிப்பறியில் ஈடுபட்ட 2 எதிரிகளே, மற்ற 2 செல்போன் திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது தெரிய வந்தது.
அதன் பேரில், காவல் குழுவினர் எதிரிகளின் உருவங்கள், இருசக்கர வாகனத்தின் பதிவு எண் மற்றும் அடையாளங்களை வைத்து மேற்படி குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 1.அஜய், வ/19, த/பெ.முனியாண்டி, 29 வது தெரு, B.V.காலனி, வியாசர்பாடி, சென்னை, 2.முகமது சபியுல்லா, வ/19, த/பெ. அல்லா பகஷ், 29வது தெரு, B.V.காலனி, வியாசர்பாடி ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 செல்போன்கள், குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் மற்றும் 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் எதிரி அஜய் மீது ஏற்கனவே P-6 கொடுங்கையூர் காவல் நிலையத்தில் 1 வழிப்பறி வழக்கு உள்ளது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.