தமிழக மக்கள் அனைவரையும் குறிப்பாக கிராமப்புறங்களில் அனைத்து மக்களையும் தடுப்பூசி போட ஊக்குவிக்கும் வகையில் சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம் ஒரு பெரிய பொது சேவை திட்டமான ‘ஊசிங்கோ‘ என்னும் திட்டத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய தொற்றுநோய் சூழ்நிலையை எதிர்த்துப் போராடுவதற்கு தடுப்பூசி போடுவதே சிறந்த மற்றும் ஒரே வழி என்று இந்நிறுவனம் உறுதியாக நம்புகிறது. இதன் காரணமாக இந்நிறுவனம் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு மியூசிக் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இது குறித்து சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் ஹர்ஷா விஜி கூறுகையில், மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடுவதில் தமிழக அரசு சிறப்பாக கவனம் செலுத்தி வருகிறது. இருப்பினும், தமிழகத்தின் சிறுபான்மை குடிமக்களில் பெரும்பாலானோர் பல்வேறு காரணங்களுக்காக தடுப்பூசியை தவிர்க்கிறார்கள் என்று ஆய்வுகள் மற்றும் நிகழ்வு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு முக்கியமான தருணம் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தின் கடைசி கட்டத்தில் நாம் இருக்கிறோம். எனவே நம் மக்களுக்கு தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை ஊசி போட்டுக் கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், எங்களின் தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரம், அரசாங்கத்தின் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பதோடு, 100 சதவீத தடுப்பூசி இலக்கை அடைய உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிறுவனத்தின் மாபெரும் தடுப்பூசி விழிப்புணர்வின் ஒரு பகுதியாக தடுப்பூசியின் பின்விளைவுகள் பற்றிய வதந்திகளை முறியடித்து தமிழக மக்களை தடுப்பூசி போட ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு மியூசிக் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு புகழ்பெற்ற இசை அமைப்பாளரும் பாடகருமான அனிருத் ரவிச்சந்தர்
இசை அமைத்துள்ளார். இதற்கான பாடலை பாடலாசிரியர் அறிவரசு கலைநேசன் எழுதியுள்ளார். அனிருத் மற்றும் அறிவு ஆகிய இருவரும் இதில் பாடி உள்ளனர். இந்த வீடியோவை இயக்குனர் அஜய் ஞானமுத்து, நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹன்சா ஆகியோரும் இணைந்து உருவாக்கி உள்ளனர். மேலும் இதில் ரோபோ சங்கர், பிஜே பாலா, தங்கதுரை மற்றும் தீபா சங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். இதில் அவர்கள் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து எடுத்து கூறுகின்றனர். இந்த வீடியோவை https://youtu.be/3cz1aFirnZc. -ல் பார்க்கலாம்.
இந்த பொது சேவை திட்டம் குறித்து சுந்தரம் பைனான்ஸ் நிர்வாக இயக்குனர் ராஜிவ் லோச்சன் கூறுகையில், எங்களின் சுந்தரம் பைனான்ஸ் குழுமம் சமூகத்துடன் ஒன்றிணைந்து உள்ளது. மேலும் மாற்றத்தை ஏற்படுத்த எங்களால் உதவ முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். முதல் டோஸ் போடுபவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருவதால், அதை இருமடங்காக உயர்த்துவதற்கும், தடுப்பூசி போடுவதற்கு மக்களைத் தூண்டுவதற்கும் இதுவே சரியான நேரம் என்று நாங்கள் உணர்கிறோம். ‘ஊசிங்கோ’ என்னும் எங்களின் இந்த இசை வீடியோவானது மக்களை தடுப்பூசி போடுவதற்கு சிந்திக்க வைக்கும் வழியாகும் என்று தெரிவித்தார்.
பாரம்பரிய ஊடகங்கள், டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்கள் மற்றும் அதன் சொந்த மற்றும் உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்த பொதுச் சேவை திட்டத்திற்காக சுந்தரம் பைனான்ஸ் குழுமம் 10 கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிட்டுள்ளது.
சுந்தரம் பைனான்ஸ் குழுமம் அதன் சிறப்பான செயல்பாடுகள் காரணமாக கடந்த 70 ஆண்டுகளாக தமிழக மக்களின் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் வேரூன்றி உள்ள இந்த நிறுவனம் அதன் பொதுச் சேவைத் திட்டத்தின் மூலம் தடுப்பூசி பற்றிய தமிழக மக்களின் அச்சம் மற்றும் தயக்கத்தைப் போக்க அதிகாரிகளுக்கு உதவ விரும்புகிறது.
‘