கடந்த 02.02.2023 அன்று இரவு, தங்கசாலை பேருந்து நிறுத்தம் பின்புறம் அருகே மயக்க நிலையில், இரத்தக் காயங்களுடன் இருந்த நபரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்ததின் பேரில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில், H-1 வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மருத்துவமனைக்கு சென்று விசாரணை செய்தனர்.
மேலும் காவல் குழுவினர், சம்பவ இடமான தங்க சாலை பேருந்து நிறுத்தம் பின்புறம் விசாரணை செய்தும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் 3 நபர்கள் அந்த நபரை தாக்கி விட்டு தப்பிச் செல்வது தெரிய வந்தது. அதன் பேரில், காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட 1.மணிகண்டன், வ/24, த/பெ.கார்த்திக், லஷ்மி கோயில் மார்க்கெட் 1வது தெரு, தண்டையார் பேட்டை, 2.சூர்யா (எ) தடிசூர்யா, வ/20, த/பெ.துரை, தங்கசாலை பிளாட்பாரம், பழைய வண்ணாரப்பேட்டை, 3.பிரேம், வ/46, த/பெ.அப்துல்ரஹீம், ராமதாஸ் நகர், பழைய வண்ணாரப்பேட்டை ஆகிய 3 நபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
பிடிபட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில், இரவு தங்க சாலை பேருந்து நிறுத்தம் பின்புறம் மேற்படி பாதிக்கப்பட்ட நபர் மது அருந்தி கொண்டிருந்ததாகவும், அப்பொழுது மேற்படி 3 எதிரிகளும் மது அருந்த பணம் கேட்டு தராததால், 3 நபர்களும் சேர்ந்து அந்த நபரை மதுபாட்டில் மற்றும் கல்லால் தாக்கி அவரிடமிருந்த பணம், செல்போன் மற்றும் மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றதாகவும் தெரிவித்தனர்.
அதன் பேரில், மேற்படி சம்பவம் குறித்து H-1 வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து எதிரிகள் மணிகண்டன், சூர்யா மற்றும் பிரேம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் விசாரணையில், எதிரி பிரேம் என்பவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது 2 குற்ற வழக்குகள் உள்ளதும், மணிகண்டன் மீது 4 திருட்டு வழக்குகளும், சூர்யா மீது 1 அடிதடி வழக்கும் உள்ளது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட எதிரிகள் மூவரும் விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப் படி சிறையில் அடைக்கப்பட்டனர்.