ஜி.எஸ்.டி பெயரால் அரிசியிலும் மண் அள்ளிப் போடுவதா! ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு சிபிஐ(எம்) கடும் கண்டனம்!

மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு தனது மோசமான ஜி.எஸ்.டி வரிவிதிப்பு கொள்கையின் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கையின் மீது பெரும் யுத்தத்தையே 
தொடுத்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ஜி.எஸ்.டி வரியின் விகிதத்தை கடுமையாக உயர்த்தியதோடு, பல்வேறு அத்தியாவசிய உணவுப் பொருட்களை புதிதாக ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வந்துள்ளது. இதனால் 
அனைத்துத் தரப்பு மக்களும் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர்.

 அண்மையில் பைகளில் அடைத்து விறகப்படும் அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட 
அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் இனிமேல் 5 சதவீத ஜி.எஸ்.டி வரி 
விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இத்தகைய முடிவால் ஏழை எளிய மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாவதோடு, அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு 
தானியங்களுக்கான விலையில் ஒரு கிலோவிற்கு ரூ 3 முதல் ரூ 5 வரையிலும் விலை அதிகரிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பணவீக்கத்தாலும், கடுமையான 
விலைவாசி உயர்வினாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் மேலும் துயரத்தின் 
பிடியில் தள்ளும் நிலையும் உருவாகியுள்ளது.

ஒன்றிய அரசின் இத்தகைய மோசமான முடிவை கைவிட வலியுறுத்தி தமிழகம் 
முழுவதும் உள்ள அரிசி ஆலைகள், மொத்த மற்றும் சில்லறை வணிகர்கள் மற்றும் 
கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வேலை நிறுத்தத்தில் 
ஈடுபடுவதென முடிவு செய்துள்ளதோடு, தமிழகம் முழுவதும் 4000க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழகம் 
மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, சத்தீஷ்கர், மேற்குவங்காளம், உத்திரபிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பல மாநிலங்களிலும் எதிர்ப்பு போராட்டங்கள் 
வலுப்பெறுகின்றன.

 ஒன்றிய பாஜக அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதோடு, அரிசி, கோதுமை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீது விதித்துள்ள ஜி.எஸ்.டி வரியை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும், அண்மையில் உயர்த்தப்பட்டுள்ள இதர பொருட்கள் மீதான வரி விகிதத்தையும் முழுமையாக திரும்பப் பெற 
வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »