சோழவந்தான் பகுதியில் திட்டப்பணிகளை பேரூராட்சிகள் ஆணையர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு..

சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து பேரூராட்சிகளின் ஆணையர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ், இணை இயக்குனர் மலையமான் ஆகியோர் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆர்.எம்.எஸ். காலனியில் பூங்கா அமைப்பதற்கு 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டனர்.

பின்னர் அங்கு மரக்கன்றுகளை நட்டனர். இதைத்தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நடைபெறும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை வீடுதோறும் வாங்கும் திட்டங்களை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். 

தினசரி சந்தை
பின்பு புதிய தினசரி சந்தையை பார்வையிட்டார். வாடிப்பட்டி ரோட்டில் உள்ள வளமீட்பு பூங்காவை பார்வையிட்டு மண்புழு உரம் மற்றும் கலவை உரம் தயாரிக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார். புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலையத்தை பார்வையிட்டார். ஆய்வு முடித்து பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் சம்பந்தமான பணிகளில் ஆய்வு செய்து, வாக்காளர்கள் மற்றும் வாக்குச்சாவடி விவரங்களை கேட்டறிந்தார். 

இந்த ஆய்வில் மதுரை மண்டல உதவி இயக்குனர் சேதுராமன், செயற்பொறியாளர் ஜாய்ராஜ், உதவி செயற்பொறியாளர் சுரேஷ், செயல் அலுவலர் ஜீலான்பானு ஆகியோர் கலந்து கொண்டனர்.

வாடிப்பட்டி பேரூராட்சியில் பருவமழையையொட்டி சீரமைக்கப்பட்ட போடிநாயக்கன்பட்டி 10-வது வார்டில் உள்ள நல்லான் ஊருணியை பேரூராட்சி ஆணையர் செல்வராஜ், இணை இயக்குனர் மலையமான் திருமுடிக்காரி ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் அங்கு மரக்கன்றுகளை நடவு செய்தனர். இந்த ஆய்வின் போது உதவிபொறியாளர் கருப்பையா, செயல் அலுவலர் சண்முகம் ஆகியோர் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »