சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் காவல் ஆளிநர்களுக்கு அவர்களது நற்பணியை பாராட்டும் விதமாக அவ்வப்போது பாராட்டு சான்றிதழ்களுடன் உரிய வெகுமதியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், உத்தரவின் பேரில், தலைமையிட கூடுதல் காவல் ஆணையாளர் தலைமையிலான குழு ஒவ்வொரு மாதமும் தீவிரமாக ஆராய்ந்து, சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பாகவும் மெச்சத்தக்க வகையிலும் பணிசெய்யும் காவல் அதிகாரி அல்லது ஆளிநரை கண்டறிந்து அவர்களது சிறப்பான பணியினை மதிப்பிட்டு “மாதத்தின் நட்சத்திர காவல் விருது” (Police Star of The Month) பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் நட்சத்திர காவலர் விருதுக்கு தேர்வு செய்யப்படும் காவல் அலுவலருக்கு ரூ.5,000 பண வெகுமதியுடன் தனிப்பட்ட செயல்திறன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், கடந்த ஜனவரி-2023 மாதத்தின் நட்சத்திர காவல் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட F-5 சூளைமேடு காவல் நிலைய தலைமைக் காவலர் G.சுரேஷ் (த.கா.27823) என்பவரை நேரில் அழைத்து ஜனவரி மாத நட்சத்திர காவல் விருதுக்குரிய பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி ரூ.5,000/- வழங்கி கௌரவித்தார்.
கடந்த 17.01.2023 அன்று இரவு, சென்னை, ஜாபர்கான் பேட்டையில் வசித்து வரும் 13 வயது சிறுவன் பெற்றோர் கண்டித்ததால், வீட்டை விட்டு வெளியேறியதால், R-6 குமரன்நகர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர். இந்நிலையில், F-5 சூளைமேடு காவல்நிலைய ஜிப்சி ரோந்து வாகன பொறுப்பு/தலைமைக் காவலர் சுரேஷ் ( த.கா.27823) என்பவர் நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் (18.01.2023 அதிகாலை) அரும்பாக்கம், மெட்ரோரயில் நிலையம் அருகில் தனியாக நடந்து சென்ற ஒரு சிறுவனை நிறுத்தி விசாரித்த போது சற்று முன்பு R-6 குமரன் நகர் காவல் நிலைய எல்லையில் காணாமல் போன 13 வயது சிறுவன் என தெரிய வந்ததின் பேரில், சிறுவன் குறித்து காவல் நிலைய ஆய்வாளரிடம் தகவல் தெரிவித்து, பெற்றோரை வரவழைத்து, குழந்தைகள் நல அமைப்பினர் முன்னிலையில், சிறுவன் பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.