சென்னை பெருநகரை குற்றங்களற்ற நகரமாக்கும் நோக்கில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், உத்தரவின் பேரில் காவல் துறையின் மூன்றாவது கண் என்றழைக்கப்படும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் சென்னை நகரம் முழுவதும் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன் விளைவாக சென்னை பெருநகரின் அநேக இடங்களில் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் மூலம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சென்னை திருவல்லிக்கேணி மாவட்டம், நுங்கம்பாக்கம் காவல் சரகத்தில் உள்ள முக்கிய சாலைகள், சாலைகளின் இணைப்புகள் மற்றும் இதர தெருக்களில் என 917 இடங்களில் 50 மீட்டர் இடைவெளி வீதம் மொத்தம் 1,241 கேமராக்கள் ஏற்கனவே பொதுமக்களின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நுங்கம்பாக்கம் சரகத்தில் போடப்பட்டிருந்த கேமராக்களுடன் நுங்கம்பாக்கம் காவல் சரகத்தினை சேர்ந்த வியாபாரிகள் உதவியுடன் முக்கிய சாலைகள் மற்றும் சாலைகளின் இணைப்புகளில் நவீன வகை கேமராக்கள் பொறுத்துவது என முடிவெடுத்து. நுங்கம்பாக்கம் சரகத்திற்கு உட்பட்ட புதிதாக 32 இடங்களில் மொத்தம் 96 கேமராக்கள் பொருத்தப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்படி புதிதாக பொருத்தப்பட்டுள்ள நவீன தொழில் நுட்பங்கள் அடங்கிய 96 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
மேற்படி புதிதாக அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் குற்ற சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறியவும், காட்சிகள் மற்றும் வாகனங்களின் எண்கள் துல்லியமாக படம் எடுத்து கொடுக்கும் வகையிலும், இவ்வகை கேமராக்கள் வயர் இல்லாமல் சிப் மூலமாக (Wireless with Chip) பதிவு செய்யும் வகையிலும், 20 நாட்கள் வரையில் விவரங்களை சேமிக்கும் வகையிலும், கேமராக்களை யாரேனும் சேதப்படுத்தினாலோ அல்லது இயக்கத்தை நிறுத்தினாலோ (off) உடனடியாக இ-மெயில் மூலமாக தகவல் தெரிவிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி கேமராக்களின் கண்காணிப்பு மையங்கள் சரகத்தின் 32 இடங்களில் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய சிசிடிவி கேமராக்களின் உதவியால் குற்ற சம்பவங்களின் நிகழ்வுகள் துல்லியமாக படம் பிடிக்கப்பட்டு, வழக்கு விசாரணைக்கும், குற்றவாளிகளின் கைதுக்கும் உறுதுணையாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்திகழ்ச்சியில் சென்னை பெருநகரகாவல் கூடுதல் காவல் ஆணையாளர்(தெற்கு)பிரேம் ஆனந்த் சின்ஹா, கிழக்கு மண்டல காவல் இணை ஆணையாளர், தீஷாமிட்டல், காவல் துணை ஆணையாளர், திருவல்லிக்கேணி மாவட்டம் தேஷ் முக்சேகர் சஞ்சய், காவல் உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
.