தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன் பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டும் தங்களது காவல்நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் தீவிர சோதனை செய்து சென்னை பெருநகரில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக வழக்குபதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு வாரமும் சென்னை பெருநகரகாவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குட்கா புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட விபரங்கள், பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கும், உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் தொடர்ந்து இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களின் கடைகள், குடோன்களை சீல் வைக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பாக பெருநகரமாநகராட்சிக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.
அதன் பேரில் சென்னையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 100 கடைகளை பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து மூடிநடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதில் குறிப்பிடும் படியாக கடந்த 19.08.2021 அன்று மாதவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 100 குடோன் பகுதியில் எண்.19 என்ற கிடங்கில் மாதவரம் போலீசார் சோதனை செய்து, அங்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த கிடங்கின் உரிமையாளர் சந்திரபிரகாஷ், வ/44, த/பெ.டகல்சந்த், எண்.19/24 ரங்கபிள்ளை கார்டன் தெரு, கொண்டித்தோப்பு, சென்னை என்பவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர் . அவரிடமிருந்து 4,400 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் மற்றும் 1 கண்டெய்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி குடோனை மூட சென்னை பெருநகர காவல்துறை சார்பாக பெருநகர மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. அதன் பேரில் மேற்படி குடோனை மாநராட்சி அதிகாரிகள் மூடி சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் கண்டறிந்தால். அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் ங்கர்ஜிவால், எச்சரிக்கை விடுத்துள்ளார்.