ஆண்டிபட்டி – தேனி மாவட்டம், உத்தமபாளையம், கூடலூர் அருகே உள்ள சுருளியாறு மின்நிலையமானது அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. சுருளி மின்நிலையத்தில் 35 மெகாவாட் மின்சாரம் தயார் செய்யப்படுகிறது. இம்மின் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மின் நிலையம் அருகே வனப்பகுதியில் குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் கூட்டமாக உலா வருவதால் இரவு நேரங்களில் யாரும் வீட்டை விட்டு பயந்து வெளியே வருவதில்லை. மேலும் அப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகள் மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தி விடுகிறது.
குடியிருப்புவாசிகள் கூறுகையில் இரவு நேரங்களில் கூட்டமாக வரும் யானைகள் ஒரு சில நேரங்களில் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை சேதப்படுத்திவிடுகிறது. எனவே யானை கூட்டத்தில் இருந்து எங்களை காப்பாற்ற வேண்டும் எனில் வனத்துறையினர் எங்கள் குடியிருப்பு பகுதியை சுற்றி சோலார் மின் வேலி அமைத்து தர வேண்டும் என்று அச்சத்தோடு கூறுகின்றனர்.