சென்னை, ஜாபர்கான் பேட்டையில் வசிக்கும் கல்லூரி மாணவர் சாலமன், வ/19 என்பவர், தினசரி கல்லூரிக்கு பேருந்து தடம் எண்.5E பேருந்தில் சென்று வருவார். சாலமன் கடந்த 24.02.2023 அன்று காலை மேற்படி பேருந்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த போது, திடீரென அவரது செல்போனை ஒரு நபர் திருடிக் கொண்டு அவரது கூட்டாளியுடன் பேருந்தில் இருந்து இறங்க முற்பட்ட போது, சுதாரித்துக் கொண்ட சாலமன் சத்தம் போடவே, பொதுமக்கள் இருவரையும் பிடிக்க சென்ற போது, ஒரு நபர் தப்பியோடவே, மற்றொரு நபர் செல்போனுடன் பிடிப்பட்டார். உடனே, சாலமன் பொதுமக்கள் உதவியுடன் பிடிபட்ட நபரை J-4 கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
J-4 கோட்டூர்புரம் காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில், பிடிபட்ட நபர் சூர்யகுமார் என்பதும், தப்பிச் சென்றது அவரது உறவினரான சுரேஷ் என்பதும், இருவரும் சேர்ந்து கூட்டமாக செல்லும் பேருந்தில் பயணித்து, பொதுமக்களின் செல்போன்களை திருடுவதும், பின்னர் திருடிய செல்போன்களை சுரேஷின் மனைவி க தாவிடம் கொடுத்து விற்பனை செய்வதும் தெரிய வந்தது.
அதன் பேரில், மேற்படி எதிரி சூர்யகுமார், வ/22, த/பெ.செல்வம், போஜராஜன் நகர் மெயின் ரோடு, பழைய வண்ணாரப் பேட்டை மற்றும் இவரது உறவினரானகவிதா, பெ/வ.19, க/பெ.சுரேஷ், போஜராஜன் நகர் மெயின் ரோடு, பழைய வண்ணாரப்பேட்டை ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரரின் செல்போன் உட்பட 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகயிருந்த சுரேஷ், வ/32, த/பெ. குமார்,போஜராஜன் நகர், பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை என்பவரை தனிப்படை காவல் குழுவினர் கைதுசெய்தனர். அவரிடமிருந்து 16 செல்போன்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட சுரேஷ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.