சென்னை, கொடுங்கையூர், சின்னான்டிமடம், சோலையம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் வினோத்குமார், வ/22, த/பெ.பாலன் என்பவர் மாலை சுமார் 04.30 மணியளவில் அவரது நண்பர்களுடன் கொடுங்கையூர், கவியரசு கண்ணதாசன் நகரில் உள்ள மாநகராட்சி பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு இரு சக்கரவாகனத்தில்வந்த 2 நபர்கள் மேற்படி வினோத்குமார் மற்றும் அவரது நண்பர் அனில்குமாரை கையால் தாக்கி, அவர்கள் வைத்திருந்த 2 செல்போன்களை பறித்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றனர். உடனே, இருவரும் சத்தம் போடவே, அருகில் விளையாடிக் கொண்டிருந்த நபர்கள் மற்றும் பொதுமக்கள் துரத்திச் சென்று இரு சக்கர வாகனத்தை மடக்கி நிறுத்தியபோது, பின்னால் அமர்ந்திருந்த நபர் தப்பியோடி விட்டார். உடனே, காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில், P-6 கொடுங்கையூர் காவல் நிலைய ரோந்து காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிடிபட்ட நபரை, இருசக்கரவாகனம் மற்றும் 2 செல்போன்களுடன் P-6 கொடுங்கையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
P-6 கொடுங்கையூர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில், பிடிபட்ட நபர் சாய்வீரா, வ/24, த/பெ.ஶ்ரீதர், கோவிந்தன் 2வது தெரு, மேட்டுப்பாளையம், ஓட்டேரி, சென்னை என்பதும், சாய்வீரா அவரது நண்பர் மதன் என்பவருடன் சேர்ந்து மேற்படி புகார்தாரர்களை கையால் தாக்கி செல்போன் பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும்போது, பொதுமக்கள் துரத்திச் சென்று பிடித்தபோது, மதன் தப்பிச்சென்றதும் தெரியவந்தது.
அதன்பேரில், P-6 கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து எதிரி சாய்வீரா கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து புகார்தாரர்களின் 2 செல்போன்கள் மற்றும் குற்றச்செயலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தப்பியோடிய மதன் என்பவரை பிடிக்க காவல் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட எதிரி சாய் வீரா, விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்படஉள்ளார்.