சென்னை, செம்மஞ்சேரி, சுனாமி குடியிருப்பு, எண்.21 என்ற முகவரியைச் சேர்ந்த கார்த்திக், வ/28, த/பெ.குமார் என்பவர் நேற்று (27.11.2022) காலை வேளச்சேரி, செக்போஸ்ட்,பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள நடைபாதையில் இரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக, கார்த்திக் உடன் சேர்ந்து வாழ்ந்து வந்த சந்தியா, பெ/வ/24 என்பவர் J-3 கிண்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
J-3 கிண்டி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்தின் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்தும், சந்தியா கொடுத்த தகவல்களின் பேரில் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டை நடத்தி மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 1.பாண்டியன், வ/32, த/பெ. மகாலிங்கம், எண்.3/567, நொச்சிக்குப்பம், சாந்தோம்சர்ச், மயிலாப்பூர் 2.ஏக் (எ) பாஸ்கர், வ/42, த/பெ. மனோகரன், பிளாட்பார்ம், தேனாம்பேட்டை, சென்னை ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 உருட்டுக்கட்டை, மற்றும் 1 சிறிய கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் போலீசாரின் விசாரணையில் கொலையுண்ட கார்த்திக், குற்றவாளி பாண்டியனின் மனைவியான சந்தியா என்பவரை திருமணம் செய்யாமல் அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்திலிருந்த பாண்டியன் தனது நண்பரான ஏக் (எ) பாஸ்கர் என்பவருடன் சேர்ந்து நேற்று (27.11.2022) அதிகாலை கார்த்திக் மேற்படி சம்பவ இடத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது, உருட்டுக் கட்டையால் தாக்கியும், சிறிய கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளது தெரிய வந்தது.
விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட பாண்டியன் மற்றும் ஏக் (எ) பாஸ்கர் இருவரும் நேற்று (27.11.2022) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.