வருஷநாடு – காஞ்சிபுரம் டாஸ்மாக் வடக்கு மாவட்ட ஓரகடம் கடை எண்.4109 விற்பனையாளர் துளசி மற்றும் அதே கடையை சார்ந்த விற்பனையாளர் ராமு ஆகியோர் சமூக விரோதிகளால் அரிவாளால் தாக்கப்பட்டு துளசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ராமு கடுமையான வெட்டுக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த துயரச் சம்பவம் மிகுந்த வருத்தத்திற்கு உரியது. எனவே தொ.மு.ச தலைமைச் சங்கம் இச்சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறது.
இந்த சம்பவத்தை நிகழ்த்திய கொடூரக் கொலைகாரர்களை உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற குற்றச் சம்பவங்கள் மேலும் நடக்காமல் இருக்க தமிழகம் முழுவதிலும் உள்ள பாதுகாப்பற்ற இடங்களில் உள்ள கடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக மாற்றி அமைத்திட வேண்டும். டாஸ்மாக் நிர்வாகம் பணியாற்றக்கூடிய பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்கி பணியாளரின் உயிருக்கு உத்தரவாதம் வழங்கி மன அமைதியுடன் பணி செய்திட உறுதிப்படுத்தவேண்டும். கொடூரத் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூபாய் 50 லட்சம் மற்றும் கல்வி தகுதிக்கு ஏற்ப குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கிட வேண்டும்.
படுகாயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளிக்கு உயர்தர சிகிச்சை வழங்கிட வேண்டும். அதற்கான முழு செலவையும் நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். பலத்த வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளிக்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு நிதி வழங்கிட வேண்டும், அவரால் பணியாற்ற இயலாத நிலை ஏற்படுமாயின் அவருடைய குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசுத் துறையில் பணி வழங்கி உதவிட வேண்டும் என டாஸ்மாக் தொ.மு.ச தலைமைச் சங்கம் தமிழக அரசையும் டாஸ்மாக் நிர்வாகத்தையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.