கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டத்தில் வேர்கிளம்பி பேரூராட்சியில் செயல் அலுவலராக உஷா கிரேசி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் தொடர் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பல்வேறு முறைகேடுகள் நடந்து வந்துள்ள நிலையில் கட்டட வரைபட அனுமதி மற்றும் டெண்டர் விவகாரங்களில் சட்டவிரோதமாக செயல்பட்டு உள்ளதாக தெரிகிறது. குறிப்பாக ஒரு சாலையில் 40 லட்ச ரூபாய்க்கு சாலை பணி செய்வதாக இருந்தால் 40 லட்ச ரூபாய்க்கு டெண்டர் போடும்போது உயர் அதிகாரிகள் இடத்தில் அனுமதி வாங்கவேண்டும். அதை தவிர்க்க தலா 4 லட்சம் ரூபாய் வீதம் பணியின் பெயர்களை மாற்றி மாற்றி டெண்டர் போட்டு ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் பெற்று சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளனர்.
குறிப்பாக கட்டட வரைபட அனுமதிக்காக விண்ணப்பிக்கும்போது சம்பவ இடத்தை பார்வையிட பல நாட்கள் கடத்துவது உண்டு. மேலும் வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி நபர் என்று கூறப்படும் முருகன் என்பவரை “தனியாக கவனித்தால்” மட்டுமே ஒரு மாதத்தில் கட்டட வரைபட அனுமதி கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்தில் கட்டட வரைபட அனுமதிக்காக விண்ணப்பித்தால் மேற்படி முருகனை கவனித்துவிட்டு அதன் பின்னர் அவர் கூறும் நாட்கள் வரை காத்திருக்க வேண்டும். சுமார் 15 நாட்களுக்கு பின்னர் அவர் கட்டட வரைபட அனுமதிக்காக பணம் செலுத்த கூறுவார். அதன் பின்னர் மீண்டும் தொடர்ந்து உரிய தொகை லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பின்னர் 15 நாட்களில் கட்டட வரைபட அனுமதி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
எப்படியும் ஒரு மாதத்தில் கட்டட அனுமதி வாங்குவதற்கே பல ஆயிரங்கள் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்தில் தொடர்ந்து வருகிறது. பேரூராட்சி செயல் அலுவலரை விட மிகவும் சக்தி வாய்ந்த நபராக மேற்படி முருகன் என்பவர் வலம் வருவதால் அவரை மிஞ்சி எந்த நடவடிக்கையும் யாராலும் எடுக்க இயலாது. மேலும் செயல் அலுவலரை நேரில் சந்திக்க இவர் அனுமதித்தால் மட்டுமே சந்திக்க முடியும். அவருடைய அலுவலக செல்போன் எண்ணை கூட மிகவும் ரகசியமாக பாதுகாத்து வரும் முருகன் கட்டட வரைபட அனுமதி உட்பட பல்வேறு அனுமதிகளுக்காக பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் சென்றால் முருகன் போடும் உத்தரவுகள் படிதான் வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகம் செயல்பட இயலும் என்ற நிலை உருவாகியுள்ளது.
வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த நபராக இவர் உருவாக காரணம் உயர் அதிகாரிகள்தான் என்றும் கூறப்படுகிறது. ஒரு சிலரிடம் கட்டட வரைபட அனுமதிக்காக பல்லாயிரம் பணம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு மட்டும் 15 நாட்களில் கட்டட வரைபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் குறைந்த அளவில் லஞ்சம் கொடுப்பவருக்கு முருகன் ஒரு மாத காலமாவது தாமதித்து தான் கட்டட வரைபட அனுமதி வழங்கி வருவதாக கூறப்படுகிறது. தற்போதைய டெண்டர் விவகாரத்தில் கூட ஒப்பந்ததாரர்கள் லஞ்சம் பெற்று அதற்கான ஆவணங்களை தயார் செய்து பேரூராட்சி செயல் அலுவலர் உடந்தையுடன் செயல்படுத்திய தாகவும் கூறப்படுகிறது. ஆகவே பேரூராட்சி அலுவலகங்களில் பேரூராட்சி செயல் அலுவலரை விட அதிகாரம் மிக்கவராக காட்டிக்கொள்ள முயலும் நபர்களை கலை எடுத்து பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வேர்கிளம்பி பேரூராட்சியை போல பல்வேறு பேரூராட்சிகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க இயலும் என்பதே சமூக ஆர்வலர்களின் கூற்றாக உள்ளது