வருஷநாடு – தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு ஊராட்சியில் உள்ள கடமலைக்குண்டு கிராமத்தில் சுமார் 8,500 வாக்காளர்களும் 4500 குடும்பங்களும் 22 சமுதாய மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு சுடுகாடு கடமலைக்குண்டு கரட்டுப்பட்டி வைகை ஆற்றுப்படுகையில் உள்ளது. தற்போது அதிக மக்கள்தொகை வசிக்கும் இவ்வூருக்கு ஒதுக்கப்பட்ட சுடுகாடு முழு ஆக்கிரமிப்பில் உள்ளதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக எங்களது மூதாதையர் காலத்தில் இருந்து இந்த சுடுகாட்டை பயன்படுத்தி வருவதாகவும், எவ்வித கல்லறையும் கட்டக்கூடாது என கட்டுப்பாடு இவ்வூரில் இருப்பதாகவும், வைகை ஆற்றில் வெள்ளம் ஏற்படும் போது சிறுக சிறுக மண் அரிப்பு ஏற்பட்டு வைகை ஆறும் சுடுகாடும் சமநிலையில் உள்ளதாகவும், இதனால் வைகை ஆற்றில் வெள்ளம் ஏற்படும் பொழுது சுடுகாட்டுக்கு உட்புகுந்து கழிவுகளை கொண்டு செல்வதால், வைகை ஆற்றில் உறை கிணறு மூலம் எடுக்கப்படும் குடிநீரில் கலந்து சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. வைகை ஆறு ஒருபுறம் சுடுகாட்டை தன்வசம் படுத்துக்கொண்டது. மேலும் ஆக்கிரமிப்பாளர்கள் சுடுகாட்டை ஆரம்பித்துள்ளதால் இக்கிராமத்திற்கு போதுமான சுடுகாடு வசதி இல்லை. புதைக்க வேண்டிய இடத்திலேயே மீண்டும் மீண்டும் தோன்றி சடலத்தை புதைக்க வேண்டிய அவல நிலையும் உள்ளது. எனவே கடமலைக்குண்டு ஊராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்றி தர பொதுமக்கள் மற்றும் அனைத்து சமுதாய நிர்வாகிகளும் கோரிக்கையாக கேட்டுக் கொள்கின்றனர். மாவட்ட ஆட்சியர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து சுடுகாட்டை மீட்டு தர வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.