சென்னை, ஓட்டேரி, மங்களபுரம், 4வது தெருவில் வசித்து வரும் துரை, வ/73, த/பெ. எட்டிராஜன் என்பவர் தனக்கு தெரிந்த நபரான அப்துல் ஜாவித் என்பவரிடம் சென்னை, ஜமாலியா, ஹைதர் கார்டன் என்ற இடத்தில் உள்ள பிளாட்டை வாங்குவதற்காக பணம் ரூ.32 லட்சத்திற்கு விலை பேசி, முடிவு செய்து, கடந்த 05.04.2010 முதல் 31.08.2011 வரையில் சிறுசிறு தொகையாக பணம் ரூ.20 லட்சம் வரை முன்பணமாக கொடுத்துள்ளார்.
பின்னர் பணத்தை பெற்றுக் கொண்ட அப்துல்ஜாவித் இடத்தை பத்திரப்பதிவு செய்து தராமலும், பணத்தை திரும்ப தராமலும் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து துரை 17.09.2011 அன்று P-2 ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை செய்து, எதிரி அப்துல்ஜாவித், (வ/43 (2011ஆண்டு), த/பெ.பாஷா, எண்.48/126, பெரம்பூர் நெடும்பாதை, ஜமாலியா, சென்னை என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
மேலும்P-2 ஓட்டேரி குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, குற்றப்பத்திரிகையை, சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும், வழக்கு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டும் வந்த நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின் படி வழக்கு விசாரணை முடித்து இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேற்படி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட எதிரிஅப்துல் ஜாவித், த/பெ.பாஷா, எண்.48/126, பெரம்பூர் நெடும்பாதை, ஜமாலியா, சென்னை என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூ.5,000/- அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 2 மாதங்கள் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், கனம் எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.
மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த P-2 ஓட்டேரி குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.