அருண் என்பவர் வியாசர்பாடி, எஸ்.ஏ.காலனி, 5வது தெருவில் அவரது வீட்டை கட்டி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, அப்பகுதியைச் சேர்ந்த இருதயராஜ் என்பவர் அருணிடம் புதிய வீடு கட்டும் இடத்தில் ஏதேனும் வேலை இருந்தால் கொடுங்கள் என கேட்டுள்ளார். ஆனால் இருதயராஜின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால், வேலை எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார். பின்னர் இருதயராஜ் மீண்டும் அருணின் வீடு கட்டும் இடத்திற்கு சென்று அங்கு எலக்டிரிஷியன் வேலை செய்து கொண்டிருந்த ஜெயபால் மற்றும் அவரது மகன் மோகன் ஆகியோரிடம் அருண் எங்கே என கேட்ட போது, அருண் இல்லை என தெரிவித்தனர். உடனே, ஆத்திரத்தில் இருதயராஜ் எனக்கு வேலை இல்லை என்று கூறி உங்களுக்கு மட்டும் வேலை கொடுத்துள்ளாரா எனக்கூறி, தான் கொண்டு வந்திருந்த கத்தியால் தந்தை ஜெயபால் மற்றும் அவரது மகன் மோகனை கத்தியால் தாக்கி விட்டு தப்பிச் சென்றார். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் மேற்படி சம்பவம் குறித்து, P-5 எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
P-5 எம்.கே.பி.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி குற்றசம்பவத்தில் ஈடுபட்ட இருதயராஜ், வ/30, த/பெ.ஆரிரிச்சர்டு, மேல்பட்டி பொன்னப்பன் தெரு, சஞ்சய்நகர், வியாசர்பாடி என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், எதிரி இருதயராஜ் மீது P-5 எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் 2014ம் ஆண்டு 1 கொலை முயற்சி வழக்கு உள்ளது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட எதிரி இருதயராஜ் விசாரணைக்குப்பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.