உத்தமபாளையம் – தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேகமலை வனப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் அணைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் கொடைக்கானலுக்கு இணையான குளிர் பிரதேசமாக விளங்குவது மேகமலைப்பகுதி. இப்பகுதியில் கன்னடா எஸ்டேட், ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, அப்பர் மணலாறு, மகாராஜா மெட்டு மற்றும் இரவங்கலாறு போன்ற மலை கிராமங்கள் உள்ளது. மலை கிராமங்களில் உள்ள மக்கள் அனைவரும் அங்குள்ள தேயிலை தோட்டங்களுக்கு கூலி வேலைக்கு செல்கின்றனர். தற்போது அப்பகுதியில் பெய்து வரும் கன மழையால் தேயிலைத் தோட்டங்களில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ஹைவேவிஸ் அணை வெண்ணியாறு அணை மற்றும் இரவங்கலாறு அணை ஆகிய மூன்று அணைகளும் நிரம்பியுள்ளது. மலைப்பகுதியில் உள்ள அணைகளிலிருந்து கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியிலுள்ள சுருளி மின் நிலையத்திற்கு சுரங்கத்தின் வழியாக மின்சாரம் தயாரிப்பதற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழையால் சுருளி மின் நிலையத்திற்கு நீர்வரத்து சீராக வந்து கொண்டிருக்கிறது.
தேனி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற ஆன்மீக சுற்றுலா தலமான சுருளி அருவிக்கும் நீர்வரத்து குறையாமல் வந்து கொண்டிருக்கிறது. மேலும் மேகமலைப் பகுதியிலிருந்து வருஷநாடு பள்ளத்தாக்குப் பகுதியிலுள்ள சின்னச் சுருளி அருவிக்கும் நீர்வரத்து தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. மேகமலையில் தற்போது பெய்து வரும் மழையால் அவ்வப்போது மேகக்கூட்டங்கள் ரம்மியமாக காட்சியளிக்கிறது. மிதமான குளிர்ச்சி நிலவுவதால் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. இப்பகுதியில் பெய்த மழையால் விவசாயிகளும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.