அலங்காநல்லூர் – மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் யூனியன் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஒன்றிய அளவிலான தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்க ஒன்றிய தலைவர் ரகுபதி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை ஒன்றிய செயலாளர் செல்வமூர்த்தி, ஒன்றிய பொருளாளர் சந்திரன், அனைத்து பணியாளர் சங்க ஒன்றிய செயலாளர் மாணிக்கம், மேல்நிலை தொட்டி இயக்குனர் ஜெகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சியில் பணியாற்றி வரும் கிராம ஊராட்சியின் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான மாத ஊதியம் பெறும் வகையில் ஊதியத்தை நிர்ணயித்து நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், 30 ஆண்டுகால பணிக் காலத்தை கருத்தில்கொண்டு சிறப்பு காலமுறை ஊதியம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனவும் ஊழியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியத்தை அரசு கருவூலத்தில் வழங்கிட வேண்டும் அல்லது ஊராட்சி மூலம் பெரும் வகையிலாவது தற்காலிக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் 3 ஆண்டுகள் பணி முடித்த ஊராட்சி செயலர்களுக்கு வட்டாரத்திற்குள் பணியிட மாறுதல் செய்வதுடன், ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் பதிவுறு எழுத்தர்களுக்கு உண்டான அனைத்து அரசு சலுகைகளையும் உடனே வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.