அடையாறு, கஸ்தூரிபாய் நகரிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 23 வயதுடைய கல்லூரி மாணவி, அவரது தாயாருடன் வசித்து வந்த சமயத்தில், கடந்த 02.3.2018 அன்று இரவு, வெளியே சென்றிருந்த மாணவியின் தாய் வீட்டு கதவை தட்டிய போது, வீட்டிற்குள் மகளின் அலறல் சத்தம் கேட்கவே, மாணவியின் தாய் சத்தம் போட்டு அருகில் வசிப்பவர்களை உதவிக்கு அழைத்து, கதவை உடைத்து உள்ளே சென்றபோது, தனியார் காவலாளி உடையில் இருந்த ஒருநபர் வெளியே தப்பியோட முயன்றபோது, அவரை மடக்கிப் பிடித்து காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல்கொடுத்தனர்.
J-2 அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பிடிபட்ட காவலாளியை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் பிடிட்ட நபர் நிர்பய்குமார், வ/27, த/பெ. சத்ரவத்யாதவ், நாலந்தா மாவட்டம், பீகார் மாநிலம் என்பதும், அடையாறு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்ததும், சம்பவத்தன்று அடுக்குமாடி குடியிருப்பில் சென்றபோது, மேற்படி வீட்டில் கல்லூரி மாணவி தனியாக இருப்பது தெரிந்து கொண்டு,வீட்டிற்குள்அத்துமீறி நுழைந்து, கல்லூரி மாணவியை தாக்கி, மானபங்க முயற்சியில் ஈடுபட்டு, கல்லூரி மாணவியை தலையணையால் அமுக்கியும், தலையை சுவற்றில் மோதியும் கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதன் பேரில், J-2 அடையாறு காவல் நிலையத்தில் கொலை முயற்சிஉள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, எதிரி நிர்பய்குமாரை கைதுசெய்து, நீதிமன்றக்காவலுக்கு உட்படுத்தப்பட்டார். சென்னை அல்லிக்குளம் வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் இவ்வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,J-2 அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும் வழக்கு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக கண்காணித்தும் வந்த நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடிவடைந்து இன்று (02.12.2021) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேற்படி வழக்கில் எதிரி நிர்பய்குமார் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி நிர்பய்குமாருக்கு 2 சட்டப்பிரிவுகளில் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனை மற்றும் தலா ரூ.5,000/- அபராதமும், மற்றொரு சட்டப்பிரிவில் 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனை மற்றும் ரூ.5,000/.அபராதமும், இவை அனைத்தையும் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என மொத்தம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனை மற்றும் ரூ.15,000/- அபராதம் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதன் பேரில் குற்றவாளி நிர்பய்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.
நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த J-2 அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.